Popular Posts

Tuesday, April 26, 2022

அகத்தியர் தேவாரத் திரட்டு

 

அகத்தியர் தேவாரத் திரட்டு

 

குருவருள்(1)

 

திருச்சிற்றம்பலம்

 

 

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை

இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை

நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்

புந்தியில் வைத்து அடிபோற்றுகின்றேனே!


தோடுடைய செவியன் விடைஏறி ஓர் தூவெண் மதிசூடிக்
காடுடைய சுடலைப்பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன்
ஏடுடைய மலரால் முனைநாள் பணிந்து ஏத்த அருள் செய்த
பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே.

முற்றல் ஆமை இளநாகமோடு ஏனம் முளைக்கொம்பு அவை பூண்டு
வற்றலோடு கலனாப்பல் தேர்ந்து எனது உள்ளம் கவர் கள்வன்
கற்றல் கேட்டல் உடையார் பெரியார் கழல் கையால் தொழுது ஏத்தப்
பெற்றம் ஊர்ந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே.

நீர்பரந்த நிமிர் புன்சடை மேலோர் நிலா வெண்மதி சூடி
ஏர்பரந்த இன வெள்வளை சோர எனது உள்ளம் கவர் கள்வன்
ஊர் பரந்த உலகின் முதலாகிய ஓர் ஊர் இதுவென்னப்
பேர்பரந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே.

விண் மகிழ்ந்த மதிலெய்ததும் அன்றி விளங்கு தலை ஓட்டில்
உண் மகிழ்ந்து பலி தேரிய வந்து எனது உள்ளம் கவர் கள்வன்
மண் மகிழ்ந்த அரவம் மலர்க்கொன்றை மலிந்த வரை மார்பில்
பெண் மகிழ்ந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே.

ஒருமை பெண்மை உடையன் சடையன் விடை ஊரும் இவன் என்ன
அருமையாகவுரை செய்ய அமர்ந்து எனது உள்ளம் கவர் கள்வன்
கருமை பெற்ற கடல் கொள்ள மிதந்த ஓர் காலம்‌இது என்னப்
பெருமை பெற்ற பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே.

மறை கலந்த ஒலி பாடலோடு ஆடலராகி மழுவேந்தி
இறை கலந்த இனவெள்வளை சோர எனது உள்ளம் கவர் கள்வன்
கறை கலந்த கடியார் பொழில் நீடுயர் சோலைக்கதிர் சிந்தப்
பிறை கலந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே.

சடை முயங்கு புனலன் அனலன் எரி வீசிச் சதிர்வெய்த
உடை முயங்கும் அரவோடு உழிதந்து எனது உள்ளம் கவர் கள்வன்
கடல் முயங்கு கழி சூழ் குளிர் கானல் அம்பொன்னம் சிறகன்னம்
பெடைமுயங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே.

வியர் இலங்கு வரை உந்திய தோள்களை வீரம் விளைவித்த
உயர் இலங்கு அரையன் வலி செற்று எனது உள்ளம் கவர் கள்வன்
துயர் இலங்கும் உலகில் பலஊழிகள் தோன்றும் பொழுதெல்லாம்
பெயர் இலங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே.

தாள்நுதல் செய்து இறை காணிய மாலொடு தண்தாமரை யானும்
நீணுதல் செய்து ஒழிய நிமிர்ந்தான் எனது உள்ளம் கவர் கள்வன்
வாள்நுதல் செய் மகளீர் முதலாகிய வையத்தவர் ஏத்தப்
பேணுதல் செய் பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே.

புத்தரோடு பொறியில் சமணும் புறங்கூற நெறி நில்லா
ஒத்த சொல்ல உலகம் பலி தேர்ந்து எனது உள்ளம் கவர் கள்வன்
மத்தயானை மறுகவ்வுரி போர்த்ததோர் மாயம் இதுவென்னப்
பித்தர் போலும் பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே.

அருநெறிய மறைவல்ல முனியகன் பொய்கை அலர் மேய
பெரு நெறிய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் தன்னை
ஒரு நெறிய மனம் வைத்துணர் ஞானசம்பந்தன் உரை செய்த
திரு நெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதாமே.

                        திருச்சிற்றம்பலம்

 

    குருவருள் (2)

 

    திருச்சிற்றம்பலம்

 

கூற்று ஆயினவாறு விலக்ககிலீர்

கொடுமை பல செய்தன நான் அறியேன்

ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும்

பிரியாது வணங்குவன் எப்பொழுதும்

தோற்றாது என் வயிற்றின் அகம் படியே

குடரோடு துடக்கி முடக்கியிட

ஆற்றேன் அடியேன் அதிகைக் கெடில

வீரட்டானத்து உறை அம்மானே.

 

நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன்

நினையாது ஒருபோதும் இருந்தறியேன்

வஞ்சம் இது ஒப்பது கண்டறியேன்

வயிற்றோடு துடக்கி முடக்கியிட

நஞ்சாகி வந்து என்னை நலிவதனை

நணுகாமல் துரந்து கரந்தும் இடீர்

அஞ்சேலும் என்னீர் அதிகைக் கெடில

வீரட்டானத்து உறை அம்மானே.

 

பணிந்தாரன பாவங்கள் பாற்றவல்லீர்

படுவெண் தலையில் பலி கொண்டு உழல்வீர்

துணிந்தே உமக்கு ஆட்செய்து வாழலுற்றால்

சுடுகின்றது சூலை தவிர்த்து அருளீர்

பிணிந்தார் பொடி கொண்டு மெய் பூசவல்லீர்

பெற்றம் ஏற்று உகந்தீர் சுற்றும் வெண்தலை கொண்டு

அணிந்தீர் அடி கேள் அதிகைக் கெடில

வீரட்டானத்து உறை அம்மானே.

 

முன்னம் அடியேன் அறியாமையினால் 

முனிந்து என்னை நலிந்து முடக்கியிடப்

பின்னை அடியேன் உமக்கு ஆளும்பட்டேன்

சுடுகின்றது சூலை தவிர்த்து அருளீர்

தன்னை அடைந்தார் வினை தீர்ப்பது அன்றோ

தலையாயவர்தம் கடன் ஆவதுதான்

அன்ன நடையார் அதிகைக் கெடில

வீரட்டானத்து உறை அம்மானே.

 

காத்து ஆள்பவர் காவல் இகழ்ந்தமையால்

கரை நின்றவர் கண்டுகொள் என்று சொல்லி

நீத்தாய கயம்புக நூக்கியிட

நிலைக்கொள்ளும் வழித்துறை ஒன்றறியேன்

வார்த்தையிது ஒப்பது கேட்டறியேன்

வயிற்றோடு துடக்கி முடக்கியிட

ஆர்த்தார் புனலார் அதிகைக் கெடில

வீரட்டானத்து  உறை அம்மானே.

 

சலம் பூவொடு தூபம் மறந்தறியேன்

தமிழோடு இசை பாடல் மறந்தறியேன்

நலம் தீங்கிலும் உன்னை மறந்து அறியேன்

உன் நாமம்என் நாவில் மறந்தறியேன்

உலந்தார் தலையில் பலி கொண்டு உழல்வாய் 

உடல் உள்ளுறு சூலை தவிர்த்து அருளாய்

அலந்தேன் அடியேன் அதிகைக் கெடில

வீரட்டானத்து உறை அம்மானே.

 

உயர்ந்தேன் மனை வாழ்க்கையும் ஒண் பொருளும்

ஒருவர் தலைகாவல் இலாமையினால்

வயந்தே உமக்கு ஆட்செய்து வாழலுற்றால்

வலிக்கின்றது சூலை தவிர்த்து அருளீர்

பயந்தே என் வயிற்றின் அகம்படியே

பறித்துப் புரட்டி அறுத்து ஈர்த்திட நான்

அயர்ந்தேன் அடியேன் அதிகைக் கெடில

வீரட்டானத்து உறை அம்மானே.

 

வலித்தேன் மனை வாழ்க்கை மகிழ்ந்தடியேன்

வஞ்சம் மனம் ஒன்றும் இலாமையினால்

சலித்தால் ஒருவர் துணை யாருமில்லைச்

சங்க வெண்குழைக்காதுடை எம்பெருமான்

கலித்தே என் வயிற்றின் அகம்படியே

கலக்கி மலக்கிட்டுக் கவர்ந்து தின்ன

அலுத்தேன் அடியேன் அதிகைக் கெடில

வீரட்டானத்து உறை அம்மானே.

 

பொன் போல மிளிர்வதோர் மேனியினீர் 

புரிபுன்சடையீர் மெலியும் பிறையீர்

துன்பே கவலை பிணி என்று இவற்றை

நணுகாமல் துரந்து கரந்துமிடீர்

என் போலிகள் உம்மை இனித் தெளியார்

அடியார் படுவது இதுவேயாகில்

அன்பே அமையும் அதிகைக் கெடில

வீரட்டானத்து உறை அம்மானே.

 

போர்த்தாய் ஆங்கோர் ஆனையின் ஈருரிதோல்

புறங்காடு அரங்காநடம் ஆடவல்லாய்

ஆர்த்தான் அரக்கன் தனை மால்வரைக்கீழ்

அடர்த்திட்டு அருள்செய்த அதுகருதாய்

வேர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தால்

என் வேதனை யான விலக்கியிடாய்

ஆர்த்தார் புனல் சூழ் அதிகைக் கெடில

வீரட்டானத்து உறை அம்மானே.

 

  திருச்சிற்றம்பலம்

 

   குருவருள் (3)

 

  திருச்சிற்றம்பலம்

 

பித்தா!  பிறைசூடீ!  பெருமானே! அருளாளா!

எத்தான் மறவாதே நினைக்கின்றேன்  மனத்துன்னை

வைத்தாய் பெண்ணைத்தென்பால் வெண்ணெய்நல்லூர்அருள்துறையுள்

அத்தா! உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே

 

நாயேன் பலநாளும் நினைப்பின்றி மனத்து உன்னை

பேயாய்த் திரிந்து எய்த்தேன் பெறலாகா அருள் பெற்றேன்

வேயார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள்துறையுள்

ஆயா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே

 

மன்னே! மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை

பொன்னே மணிதானே  வயிரம்மே பொறாது உந்தி

மின்னார் பெண்ணைத்தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள்துறையுள்

அன்னே உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே

 

முடியேன் இனிப் பிறவேன் பெறின் மூவேன் பெற்றம் ஊர்தீ

கொடியேன் பலபொய்யே உரைப்பேனைக் குறிக்கொள்நீ

செடியார் பெண்ணைத்தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள்துறையுள்

அடிகேள் உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே

பாதம் பணிவார்கள் பெறும் பண்டம் அது பணியாய்

ஆதன் பொருளானேன் அறிவில்லேன் அருளாளா

தாதார் பெண்ணைத்தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள்துறையுள்

ஆதி உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே

 

தண்ணார் மதிசூடீ தழல் போலும் திருமேனீ

எண்ணார் புரம் மூன்றும் எரியுண்ண நகைசெய்தாய்

மண்ணார் பெண்ணைத்தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள்துறையுள்

அண்ணா! உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே

 

ஊனாய் உயிரானாய்  உடலானாய் உலகானாய்

வானாய் நிலன் ஆனாய் கடல் ஆனாய் மலை ஆனாய்

தேனார் பெண்ணைத்தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள்துறையுள்

ஆனாய்! உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே

 

ஏற்றார் புரம்மூன்றும் எரியுண்ணச் சிலை தொட்டாய்

தேற்றாதன சொல்லித் திரிவேனோ செக்கர் வான் நீர்

ஏற்றாய் பெண்ணைத்தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள்துறையுள்

ஆற்றாய்! உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே

 

மழுவாள் வலன் ஏந்தீ மறை ஓதீ மங்கை பங்கா

தொழுவார் அவர் துயர் ஆயின தீர்த்தல் உனது தொழிலே

செழுவார் பெண்ணைத்தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள்துறையுள்

அழகா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே

 

காரூர் புனல் எய்திக் கரை கல்லித் திரைக் கையால்

பாரூர் புகழ் எய்தி, திகழ் பன்மாமணி உந்தி

சீரூர் பெண்ணைத்தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள்துறையுள்

ஆரூரன் எம்பெருமாற்கு ஆள் அல்லேன் எனலாமே.

திருச்சிற்றம்பலம்

பரையின் வரலாறு

திருச்சிற்றம்பலம்

 

மந்திரம் ஆவது நீறு வானவர் மேலது நீறு

சுந்தரம் ஆவது நீறு துதிக்கப்படுவது நீறு

தந்திரம் ஆவது நீறு சமயத்தில் உள்ளது நீறு

செந்துவர் வாய் உமை பங்கன் திருஆலவாயான் திருநீறே.

 

வேதத்தில் உள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு

போதம் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு

ஓதத் தகுவது நீறு உண்மையில் உள்ளது நீறு

சீதப்புனல் வயல் சூழ்ந்த திருஆலவாயான் திருநீறே.

 

முத்தி தருவது நீறு முனிவர் அணிவது நீறு

சத்தியமாவது நீறு தக்கோர் புகழ்வது  நீறு

பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு

சித்தி தருவது நீறு திருஆலவாயான் திருநீறே.

 

காண இனியது நீறு கவினைத் தருவது நீறு

பேணி அணிபவர்க்கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு

மாணம் தகைவது நீறு மதியைத் தருவது நீறு

சேணம்  தருவது நீறு திருஆலவாயான் திருநீறே.

 

பூச இனியது நீறு புண்ணியமாவது நீறு

பேச இனியது நீறு பெருந்தவத்தோர்களுக்கெல்லாம்

ஆசை கெடுப்பது நீறு அந்தமதாவது நீறு

தேசம் புகழ்வது நீறு திருஆலவாயான் திருநீறே.

 

அருத்தம தாவது நீறு அவலம் அறுப்பது நீறு

வருத்தம்  தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு

பொருத்த மதாவது நீறு புண்ணியர் பூசும் வெண்ணீறு

திருத்தகு மாளிகை சூழ்ந்த திருஆலவாயான் திருநீறே.

 

எயிலது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு

பயிலப் படுவது நீறு பாக்கியம் ஆவது நீறு

துயிலைத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறு

அயிலைப் பொலிதரு சூலத்து ஆலவாயான் திருநீறே

 

இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு

பராவணம் ஆவது நீறு பாவம் அறுப்பது நீறு

தராவணம் ஆவது நீறு தத்துவமாவது நீறு

அராஅணங்குந் திருமேனி ஆலவாயான் திருநீறே.

 

மாலொடு அயன் அறியாத வண்ணம் உள்ளது நீறு

மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு

ஏல உடம்பு இடர் தீர்க்கும் இன்பந்தருவது நீறு

ஆலம் அது உண்ட மிடற்று எம் ஆலவாயான் திருநீறே.

 

குண்டிகைக் கையர்களோடு சாக்கியர் கூட்டமும் கூட

கண் திகைப்பிப்பது நீறு கருத இனியது நீறு

எண்திசைப்  பட்டபொருளார் ஏத்தும் தகையது நீறு

அண்டத்தவர் பணிந்து ஏத்தும் ஆலவாயான் திருநீறே.

 

ஆற்றல் அடல்விடை ஏறும் ஆலவாயான் திருநீற்றைப்

போற்றிப் புகலி நிலாவும்  பூசுரன் ஞானசம்பந்தன்

தேற்றித் தென்னன் உடல் உற்ற தீப்பிணி ஆயின தீரச்

சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே.

 

 

திருச்சிற்றம்பலம்

அஞ்செழுத்து உண்மை (1)

திருச்சிற்றம்பலம்

துஞ்சலும் துஞ்சல்  இலாத போழ்தினும்

நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும்

வஞ்சகம் அற்று அடி வாழ்த்த வந்த கூற்(று)

அஞ்ச உதைத்தன அஞ்செழுத்துமே.

 

மந்திரம் நான்மறை ஆகி வானவர்

சிந்தையுள் நின்று அவர் தம்மை ஆள்வன

செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு

அந்தியுள் மந்திரம் அஞ்செழுத்துமே.

 

ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி ஒண்சுடர்

ஞான விளக்கினை ஏற்றி நன்புலத்து 

ஏனை வழி திறந்து ஏத்துவார்க்கு இடர்

ஆன கெடுப்பன அஞ்செழுத்துமே.

 

நல்லவர் தீயர் எனாது நச்சினர்

செல்லல் கெடச் சிவ முத்தி காட்டுவ

கொல்ல நமன் தமர் கொண்டுபோமிடத்து

அல்லல் கெடுப்பன அஞ்செழுத்துமே.

 

கொங்கலர் வன்மதன் வாளி ஐந்து அகத்து

அங்குள பூதமும் அஞ்சு ஐம்பொழில்

தங்கு அரவின் படம் அஞ்சும் தம்முடை

அங்கையில்  ஐவிரல் அஞ்செழுத்துமே.

 

தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்

வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்

இம்மை வினை அடர்த்து எய்தும் போழ்தினும்

அம்மையினும் துணை அஞ்செழுத்துமே.

 

வீடு பிறப்பை அறுத்து மெச்சினர்

பீடை கெடுப்பன பின்னை நாள்தொறும்

மாடு கொடுப்பன மன்னு மாநடம்

ஆடி உகப்பன அஞ்செழுத்துமே.

 

வண்டு அமர் ஓதி மடந்தை பேணின

பண்டை  இராவணன் பாடி உய்ந்தன

தொண்டர்கள் கொண்டு துதித்த பின் அவர்க்கு

அண்டம் அளிப்பன அஞ்செழுத்துமே.

 

கார்வணன் நான்முகன் காணுதற்கு ஒண்ணாச்

சீர்வணச் சேவடி செவ்வி நாள்தொறும்

பேர்வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்கு

ஆர்வணம் ஆவன அஞ்செழுத்துமே.

 

புத்தர் சமண் கழுக்கையர் பொய் கொளாச்

சித்தத்தவர்கள் தெளிந்து தேறின

வித்தக நீறு அணிவார் வினைப் பகைக்கு

அத்திர மாவன அஞ்செழுத்துமே.

 

நற்றமிழ் ஞானசம்பந்தன்  நான் மறை

கற்றவன் காழியர் மன்னன் உன்னிய

அற்றம் இல் மாலை  ஈரைந்தும் அஞ்செழுத்து

உற்றன வல்லவர் உம்பர் ஆவரே.

 

 

திருச்சிற்றம்பலம்

அஞ்செழுத்து உண்மை (2)

திருச்சிற்றம்பலம்

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி

ஓதுவார் தமை நன்நெறிக்கு உய்ப்பது

வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது

நாதன் நாமம் நமச்சிவாயவே.

 

நம்புவார் அமர் நாவில் நவிற்றினால்

வம்பு நாள்மலர் வார்மது ஒப்பது

செம்பொன்னார் திலகம் உலகுக்கெலாம்

நம்பன் நாமம் நமச்சிவாயவே.

 

நெக்குள் ஆர்வம் மிகப்பெருகி நினைந்து

அக்கு மாலை கொடு அங்கையில் எண்ணுவார்

தக்க வானவராய்த் தகுவிப்பது

நக்கன் நாமம் நமச்சிவாயவே.

 

இயமன் தூதரும் அஞ்சுவர் இன்சொலால்

நயம் வந்து ஓதவல்லார் தமை நண்ணினால்

நியமம் தான் நினைவார்க்கு இனியாள் நெற்றி

நயனன் நாமம் நமச்சிவாயவே.

 

கொல்வாரேனும் குணம் பல நன்மைகள்

இல்லாரேனும் இயம்புவர் ஆயிடின்

எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால்

நல்லார் நாமம் நமச்சிவாயவே.

 

மந்தரம் அன பாவங்கள் மேவிய

பந்தனை யவர் தாமும் பகர்வரேல்

சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால்

நந்தி நாமம் நமச்சிவாயவே.

 

நரகம் ஏழ்புக நாடினர் ஆயினும்

உரைசெய் வாயினர் ஆயின் உருத்திரர்

விரவியே புகுவித்திடும் என்பரால்

வரதன் நாமம் நமச்சிவாயவே.

 

இலங்கை மன்னன் எடுத்த அடுக்கல் மேல்

தலங்கொள் கால்விரல் சங்கரன் ஊன்றலும்

மலங்கி வாய்மொழி செய்தவன் உய்வகை

நலங்கொள் நாமம் நமச்சிவாயவே.

 

போதன் போதன கண்ணனும் அண்ணல்தன்

பாதந்தான் முடி நேடிய பண்பராய்

யாதும் காண்பரிதாகி அலந்தவர்

ஓதும் நாமம் நமச்சிவாயவே.

 

கஞ்சி மண்டையர் கையில் உண் கையர்கள்

வெஞ்சொல் மிண்டர் விரவிலர் என்பரால்

விஞ்சை அண்டர்கள் வேண்ட அமுது செய்

நஞ்சு உண்கண்டன் நமச்சிவாயவே.

 

நந்தி நாமம் நமச்சிவாய எனும்

சந்தையால் தமிழ் ஞானசம்பந்தன் சொல்

சிந்தையால் மகிழ்ந்து ஏத்த வல்லார் எல்லாம்

பந்த பாசம் அறுக்க வல்லார்களே.

 

திருச்சிற்றம்பலம்

 

அஞ்செழுத்து உண்மை (3)

திருச்சிற்றம்பலம்

சொல் துணை வேதியன் சோதி வானவன்

பொன் துணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்

கல் துணைப் பூட்டி ஓர் கடலில் பாய்ச்சினும்

நல் துணையாவது நமச்சிவாயவே.

 

பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை

ஆவினுக்கு அருங்கலம் அரன் அஞ்சாடுதல்

கோவினுக்கு அருங்கலம் கோட்டம் இல்லது

நாவினுக்கு அருங்கலம் நமச்சிவாயவே.

 

விண்ணுறவ அடுக்கிய விறகின் வெவ்அழல்

உண்ணிய புகில் அவை ஒன்றும் இல்லையாம்

பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை

நண்ணி நின்று அறுப்பது நமச்சிவாயவே.

 

இடுக்கண் பட்டு இருக்கினும் இரந்து யாரையும்

விடுக்கிற் பிரானென்று வினவுவோம் அல்லோம்

அடுக்கல் கீழ்க் கிடக்கினும் அருளின் நாமுற்ற

நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே.

 

வெந்த நீறு அருங்கலம் விரதிகட்கெலாம்

அந்தணர்க்கு அருங்கலம் அருமறை ஆறங்கம்

திங்களுக்கு அருங்கலம்  திகழும்  நீள்முடி

நங்களுக்கு அருங்கலம்  நமச்சிவாயவே.

 

சலமிலன் சங்கரன் சார்ந்தவர்க்கலால்

நலம் இலன் நாள்தொறும் நல்குவான் நலன்

குலமிலராகிலும் குலத்துக்கு ஏற்பதோர்

நலமிகக் கொடுப்பது நமச்சிவாயவே.

 

வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள்

கூடினார் அந்நெறி கூடிச் சென்றலும்

ஓடினேன் ஓடிச்சென்று உருவம் காண்டலும்

நாடினேன் நாடிற்று நமச்சிவாயவே.

 

இல்லக விளக்கது இருள் கெடுப்பது

சொல்லக விளக்கது சோதி உள்ளது

பல்லக விளக்கது பலரும் காண்பது

நல்லக விளக்கது நமச்சி வாயவே.

 

முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன்

தன்னெறியே சரண் ஆதல் திண்ணமே

அந்நெறியே சென்று அங்கு அடைந்தவர்க்கெலாம்

நன்னெறியாவது நமச்சிவாயவே.

 

மாப்பிணை தழுவிய மாதொர் பாகத்தன்

பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ

நாப்பிணை தழுவிய நமச்சி வாயப் பத்து

ஏத்தவல்லார் தமக்கு இடுக்கண் இல்லையே.

திருச்சிற்றம்பலம்

அஞ்செழுத்து உண்மை (4)

திருச்சிற்றம்பலம்

மற்றுப்பற்று எனக்கு இன்றி நின் திருப்பாதமே மனம் பாவித்தேன்

பெற்றலும் பிறந்தேன் இனிப் பிறவாத தன்மை வந்து எய்தினேன்

கற்றவர் தொழுது ஏத்தும் சீர்க்கறை ஊரில் பாண்டிக் கொடுமுடி

நற்றவா உனை நான் மறக்கினும்  சொல்லும் நா நமச்சிவாயவே.

இட்டனும் அடி ஏத்துவார் இகழ்ந்திட்ட நாள் மறந்திட்டநாள்

கெட்டநாள் இவை என்றலால் கருதேன் கிளர்புனல் காவிரி

வட்டவாசிகை கொண்டு அடிதொழுது ஏத்து பாண்டிக் கொடுமுடி

நட்டவா உனை நான்மறக்கினும்  சொல்லும் நா நமச்சிவாயவே.

 

ஓவுநாள்உணர்வு அழியும்நாள் உயிர்போகும் நாள் உயர் பாடைமேல்

காவும் நாள் இவை என்றலால் கருதேன் கிளர்புனல்  காவிரிப்

பாவுதண்புனல் வந்து இழிபரஞ்சோதி பாண்டிக் கொடுமுடி

நாவலா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.

 

எல்லையில் புகழ் எம்பிரான் எந்தை தம்பிரான் என்பொன் மாமணி

கல்லை உந்தி வளம் பொழிந்து இழி காவிரியதன் வாய்க்கரை

நல்லவர் தொழுது ஏத்தும் சீர்க்கறை ஊரில் பாண்டிக் கொடுமுடி

வல்லவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.

 

அஞ்சினார்க்கு அரண் ஆதி என்று அடியேனும் நான் மிக அஞ்சினேன்

அஞ்சல்என்று அடித்தொண்டனேற்கு அருள்நல்கினாய்க் அழிகின்றது‌என்

பஞ்சின் மெல்லடிப் பாவைமார் குடைந்து ஆடு பாண்டிக் கொடுமுடி

நஞ்சணி கண்ட நான் மறக்கினும்  சொல்லும் நா நமச்சிவாயவே.

 

ஏடுவான் இளந்திங்கள் சூடினை என்பின் கொல் புலித்தோலின் மேல்

ஆடு பாம்பது அரைக்கு அசைத்த அழகனே அந்தண் காவிரிப்

பாடு தண்புனல் வந்து இழி பரஞ்சோதி பாண்டிக் கொடுமுடிச்

சேடனே உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.

 

விரும்பி நின்மலர்ப்பாதமே நினைந்தேன் வினைகளும் விண்டன

நெருங்கி வண்பொழில் சூழ்ந்து எழில்பெற நின்ற காவிரிக் கோட்டிடைக்

குரும்பை மென்முலைக் கோதைமார் குடைந்தாடு பாண்டிக் கொடுமுடி

விரும்பனேஉனை நான் மறக்கினும்  சொல்லும் நா நமச்சிவாயவே.

 

செம்பொன் நேர்சடையாய் திரிபுரம்  தீயெழச் சிலை கோலினாய்

வம்புலாம் குழலாளைப் பாகம் அமர்ந்து காவிரிக் கோட்டிடைக்

கொம்பின் மேல் குயில் கூவ மாமயில் ஆடு பாண்டிக் கொடுமுடி

நம்பனே உனை நான் மறக்கினும்  சொல்லும் நா நமச்சிவாயவே.

 

சாரணன்தந்தை எம்பிரான்எந்தை தம்பிரான் எம்பொன் மாமணீயென்று

பேர் எணாயிர கோடி தேவர் பிதற்றி நின்று பிரிகிலார்

நாரணன் பிரமன் தொழும் கறையூரில் பாண்டிக் கொடுமுடிக்

காரணா உனை நான் மறக்கினும்  சொல்லும் நா நமச்சிவாயவே.

 

கோணிய பிறை சூடியைக் கறையூரில் பாண்டிக் கொடுமுடி

பேணிய பெருமானைப் பிஞ்ஞகப் பித்தனைப் பிறப்பு இல்லியைப்

பாணுலாவரி வண்டறை கொன்றைத் தாரனைப் படப் பாம்பரை

நாணனைத் தொண்டன் ஊரன் சொல்லிவை சொல்லுவார்க்கில்லை துன்பமே

 

திருச்சிற்றம்பலம்

 

கோயில் திறம்(1)

திருச்சிற்றம்பலம்

 

ஆரூர் தில்லை அம்பலம் வல்லம்  நல்லம்

வடகச்சியும் அச்சிறுபாக்கம் நல்ல

கூரூர் குடவாயில் குடந்தை வெண்ணி

கடல் சூழ் கழிப்பாலை தென் கோடி பீடார்

நீரூர் வயல் நின்றியூர் குன்றியூரும்

குருகாவையூர் நாரையூர் நீடு கானப்

பேரூர் நல் நீள் வயல் நெய்த்தானமும்

பிதற்றாய் பிறைசூடி தன் பேர் இடமே 

அண்ணாமலை ஈங்கோயும் அத்தி முத்தாறு

அகலா முதுகுன்றம் கொடுங்குன்றமும்

கண்ஆர் கழுக்குன்றம் கயிலை கோணம்

பயில்கற்குடி காளத்தி வாட்போக்கியும்

பண்ஆர் மொழி மங்கை ஓர் பங்கு உடையான்

   பரங்குன்றம் பருப்பதம் பேணி நின்றே                                                          

எண்ணாய் இரவும் பகலும் இடும்பைக்

கடல் நீந்தலாம் காரணமே     

 

அட்டானம் என்று ஓதிய நால் இரண்டும்

அழகன் உறை காவனைத்தும் துறைகள்

எட்டாம் திருமூர்த்தியின் காடு ஒன்பதும்

குளம் மூன்றும் களம் அஞ்சும் பாடி நான்கும்

மட்டார் குழலாள் மலை மங்கைபங்கன்

மதிக்கும் இடமாகிய பாழி மூன்றும்

சிட்டானவன் பாசூர் என்றே விரும்பாய்

அரும்பாவங்கள் ஆயின தேய்ந்து அறவே

 

அறப்பள்ளி அகத்தியான்பள்ளி வெள்ளைப் பொடி பூசி

நீறணிவான் அமர்காட்டுப்பள்ளி

சிறப்பள்ளி சிராப்பள்ளி செம்பொன்பள்ளி

திருநனிபள்ளி சீர் மகேந்திரத்துப்

பிறப்பில்லவன் பள்ளி வெள்ளச் சடையான்

விரும்பும் இடைப்பள்ளி வண் சக்கரமால்

உறைப்பால் அடி போற்றக் கொடுத்த பள்ளி

உணராய் மட நெஞ்சமே உன்னிநின்றே 

 

ஆறைவட மாகறல் அம்பர் ஐயாறு

அணியார் பெருவேளூர் விளமர் தெங்கூர்

சேறை துலை புகலூர் அகலாது இவை

  -காதலித்தான் அவன் சேர் பதியே

மன வஞ்சர் மற்று ஓட முன் மாதராரும்

மதி கூர் திருக்கூடலில் ஆலவாயும்

இனவஞ்சொல் இலாஇடை மாமருதும்

இரும்பைப்பதி மாகாளம் வெற்றியூரும்

கனமஞ்சின மால்விடையான் விரும்பும்

கருகாவூர் நல்லூர் பெரும்புலியூர்

தனமென் சொலில் தஞ்சம் என்றே நினைமின்

தவமாம் மலமாயின தானறுமே

   

மாட்டூர் மடப் பாச்சிலாச்சிரமம்

முண்டீச்சுரம் வாதவூர் வாரணாசி                                                

காட்டூர் கடம்பூர் படம்பக்கம் கொட்டும்

கடல் ஒற்றியூர்மற்று உறையூர் அவையும்

கோட்டூர் திருவாமாத்தூர் கோழம்பமும்

  -கொடுங்கோவலூர் திருக்குணவாயில்

 

-குலாவு திங்கள் சடையான் குளிரும் பரிதி நியமம்

போற்றூர் அடியார் வழிபாடு ஒழியாத்

தென்புறம்பயம் பூவணம் பூமியூரும்

காற்றூர்வரை அன்று எடுத்தான் முடிதோள் நெரித்தான்

உறை கோயில் என்றென்று நீ கருதே 

 

நெற்குன்றம் ஓத்தூர் நிறைநீர் மருகல்

நெடுவாயில் குறும்பலா நீடு திரு

நற்குன்றம் வலம்புரம் நாகேச்சுரம்

நளிர்சோலையும் சேனை மாகாளம் வாய்மூர்

கற்குன்றம் ஒன்று ஏந்தி மழை தடுத்த

கடல்வண்ணனும் மாமலரோனும் காணாச்

சொற்கு என்றும் தொலைவு இலாதான் உறையும்

குடமூக்கு என்று சொல்லிக் குலாவுமினே

குத்தங்குடி வேதிகுடி புனல் சூழ்

குருந்தங்குடி தேவன்குடி மருவும்

மத்தங்குடி தண் திருவண்குடியும்

அலம்பும் சலம் தன் சடை வைத்துகந்த

நித்தன் நிமலன் உமையோடும் கூட

நெடுங் காலம் உறைவிடம் என்று சொல்லாப்

புத்தர் புறம்கூறிய புன் சமணர்

நெடும் பொய்களை விட்டு நினைந்துய்மினே 

                                       

அம்மானை அருந்தவமாகி நின்ற

அமரர்பெருமான் பதி ஆன உன்னி

கொய்ம்மாமலர்ச்சோலை குலாவு கொச்சைக்கு

இறைவன் சிவ ஞானசம்பந்தன் சொன்ன

இம் மாலை ஈர் ஐந்தும் இரு நிலத்தில்

இரவும் பகலும் நினைந்து ஏத்தி நின்று

விம்மா வெருவா விரும்பும் அடியார்

விதியார் பிரியார் சிவன் சேவடிக்கே

திருச்சிற்றம்பலம்

 

 கோயிற்றிறம்(2)  

திருச்சிற்றம்பலம்

தில்லைச் சிற்றம்பலமும், செம்பொன்பள்ளி,

தேவன்குடி, சிராப்பள்ளி, தெங்கூர்,

கொல்லிக் குளிரறைப் பள்ளி, கோவல்

வீரட்டம், கோகரணம், கோடிகாவும்,

முல்லைப் புறவம் முருகன் பூண்டி,

முழையூர், பழையாறை, சத்தி முற்றம்,

கல்லில் திகழ் சீரார் காளத்தியும்,

கயிலாய நாதனையே காணலாமே.

ஆரூர் மூலட்டானம், ஆனைக்காவும்,

ஆக்கூரில் தான்தோன்றி மாடம், ஆவூர்,

பேரூர், பிரமபுரம், பேராவூரும்,

பெருந்துறை, காம்பீலி, பிடவூர், பேணும்

கூரார் குறுக்கை வீரட்டானமும்,

கோட்டூர், குடமூக்கு, கோழம்பமும்,

காரார் கழுக்குன்றும், கானப்பேரும், 

  கயிலாய நாதனையே காணலாமே

 

இடை மருது, ஈங்கோய், இராமேச்சுரம்,

இன்னம்பர், ஏர் இடவை, ஏமப்பேறூர்,

சடைமுடி, சாலைக்குடி, தக்களூர்,

தலையாலங்காடு, தலைச்சங்காடு,

கொடுமுடி, குற்றாலம், கொள்ளம்புதூர்,

கோத்திட்டை, கோட்டாறு, கோட்டுக்காடு,

கடைமுடி, கானூர், கடம்பந்துறை,

கயிலாய நாதனையே காணலாமே

 

எச்சில் இளமர், ஏமநல்லூர்,

இலம்பையங்கோட்டூர், இறையான் சேரி,

அச்சிறுபாக்கம், அளப்பூர், அம்பர்,

ஆவடுதண்துறை, அழுந்தூர், ஆறை,

கச்சினம், கற்குடி, கச்சூர் ஆலக்

கோயில், கரவீரம், காட்டுப்பள்ளி,

கச்சிப் பலதளியும், ஏகம்பத்தும்,

கயிலாய நாதனையே காணலாமே.

 

கொடுங்கோளூர், அஞ்சைக்களம், செங்குன்றூர்,

கொங்கணம், குன்றியூர், குரக்குக்காவும்,

நெடுங்களம், நன்னிலம், நெல்லிக்காவும்,

நின்றியூர், நீடூர், நியமநல்லூர்,

இடும்பாவனம், எழுமூர், ஏழூர், தோமூர்,

எறும்பியூர், ஏர்ஆரும் ஏமகூடம்,

கடம்பை, இளங்கோயில் தன்னிலுள்ளும்,

கயிலாய நாதனையே காணலாமே.

 

மண்ணிப் படிக்கரை, வாழ்கொளிபுத்தூர்,  

வக்கரை, மந்தாரம், வாரணாசி,

வெண்ணி, விளத்தொட்டி, வேள்விக்குடி,

விளமர், விராடபுரம், வேட்களத்தும்,

பெண்ணை அருள்துறை, தண் பெண்ணாகடம்,

பிரம்பில், பெரும்புலியூர், பெரு வேளூரும்,

கண்ணை, களர்க்காறை, கழிப்பாலையும்,

கயிலாய நாதனையே காணலாமே

 

வீழிமிழலை, வெண்காடு, வேங்கூர்,

வேதிகுடி, விசயமங்கை, வியலூர்,

ஆழி அகத்தியான்பள்ளி, அண்ணாமலை,

ஆலங்காடும், அரதைப்பெரும்

பாழி, பழனம், பனந்தாள், பாதாளம்,

பராய்த்துறை, பைஞ்ஞீலி, பனங்காட்டூர், தண்

காழி, கடல் நாகைக்காரோணத்தும்,  

கயிலாய நாதனையே காணலாமே.

 

உஞ்சேனை மாகாளம், ஊறல், ஓத்தூர்,

உருத்திரகோடி, மறைக்காட்டுள்ளும்,

மஞ்சுஆர் பொதியில் மலை, தஞ்சை, வழுவூர்

வீரட்டம், மாதானம், கேதாரத்தும்,

வெஞ்சமாக்கூடல், மீயச்சூர், வைகா,

வேதிச்சுரம், விவீச்சுரம், வெற்றியூரும்,

கஞ்சனூர், கஞ்சாறு, பஞ்சாக்கையும்,  

கயிலாய நாதனையே காணலாமே.

திண்டீச்சுரம், சேய்ஞலூர், செம்பொன் பள்ளி,

தேவூர், சிரபுரம், சிற்றேமம், சேறை,

கொண்டீச்சுரம், கூந்தலூர், கூழையூர், கூடல்,

குருகாவூர் வெள்ளடை, குமரி, கொங்கு

அண்டர் தொழும் அதிகை வீரட்டானம்,  

ஐயாறு, அசோகந்தி, ஆமாத்தூரும்,

கண்டியூர் வீரட்டம், கருகாவூரும்,

கயிலாய நாதனையே காணலாமே.

 

நறையூரில் சித்தீச்சரம், நள்ளாறு,

நாரையூர், நாகேச்சுரம், நல்லூர், நல்ல

துறையூர், சோற்றுத்துறை, சூலமங்கை,

தோணிபுரம், துருத்தி, சோமீச்சுரம்,

உறையூர், கடல் ஒற்றியூர், ஊற்றத்தூர்,  

ஓமாம்புலியூர், ஓர் ஏடகத்தும்,

கறையூர், கருப்பறியல், கன்றாப்பூரும்,  

கயிலாய நாதனையே காணலாமே.

 

புலிவலம், புத்தூர், புகலூர், புன்கூர்,

புறம்பயம், பூவணம், பொய்கை நல்லூர்,

வலிவலம், மாற்பேறு, வாய்மூர், வைகல்,

வலஞ்சுழி, வாஞ்சியம், மருகல், வன்னி

நிலமலி நெய்த்தானத்தோடு, எத்தானத்தும்

நிலவு பெருங்கோயில், பல கண்டால், தொண்டீர்!

கலிவலி மிக்கோனைக் கால்விரலால் செற்ற

கயிலாய நாதனையே காணலாமே

 

திருச்சிற்றம்பலம்

 

கோயிற்றிறம்(3)

திருச்சிற்றம்பலம்

காட்டூர்க் கடலே கடம்பூர் மலையே கானப் பேரூராய்

கோட்டூர்க் கொழுந்தே அழுந்தூர்அரசே கொழுநல் கொல்லேறே

பாட்டூர் பலரும் பரவப்படுவாய் பனங்காட்டூரானே

மாட்டூர் அறவா மறவாது உன்னைப் பாடப் பணியாயே.

 

கொங்கில் குறும்பில் குரக்குத் தளியாய் குழகா குற்றாலா

மங்குல்  திரிவாய் வானோர் தலைவா வாய்மூர் மணவாளா

சங்கக் குழையார் செவியா அழகா அவியா அனலேந்திக்

கங்குல் புறங்காட்டாடீ அடியார் கவலை களையாயே.

 

நிறைக்காட்டானே நெஞ்சத்தானே நின்றியூரானே

மிறைக்காட்டானே புனல்சேர் சடையாய் அனல்சேர் கையானே

மறைக்காட்டானே திருமாந்துறையாய் மாகோணத்தானே

இறைக்காட்டானே எங்கட்கு உன்னை எம்மான் தம்மானே.

 

ஆரூர் அத்தா ஐயாற்று அமுதே அளப்பூர் அம்மானே

காரூர் பொழில்கள் புடைசூழ் புறவில்  கருகாவூரானே

பேரூர் உறைவாய் பட்டிப்பெருமான் பிறவா நெறியானே

பாரூர் பலரும் பரவப்படுவாய் பாசூர் அம்மானே.

 

மருகல் உறைவாய் மாகாளத்தாய் மதியஞ் சடையானே

அருகல்  பிணி நின்னடியார் மேல் அகல அருளாயே

கருகல்  குரலாய் வெண்ணிக் கரும்பே கானூர்க் கட்டியே

பருகப் பணியாய் அடியார்க்கு உன்னைப் பவளப் படியானே.

 

தாங்கூர் பிணி நின்னடியார் மேல அகல அருளாயே

வேங்கூர் உறைவாய் விளமர் நகராய் விடையார் கொடியானே

நாங்கூர் உறைவாய் தேங்கூர் நகராய் நல்லூர் நம்பானே

பாங்கூர் பலிதேர் பரனே பரமா பழனப் பதியானே.

 

தேனைக் காவல் கொண்டு விண்ட கொன்றைச் செழுந்தாராய்

வானைக் காவல் கொண்டு நின்றார் அறியா நெறியானே

ஆனைக் காவில் அரனே பரனே அண்ணாமலையானே

ஊனைக் காவல் கைவிட்டுன்னை உகப்பார் உணர்வாரே.

 

துருத்திச் சுடரே நெய்த்தானத்தாய் சொல்லாய் கல்லாலா

பருத்தி நியமத்துறைவாய் வெயிலாய்ப் பலவாய்க் காற்றானாய்

திருத்தித் திருத்தி வந்தென் சிந்தை இடங்கொள் கயிலாயா

அருத்தித் துன்னை அடைந்தார் வினைகள் அகல அருளாயே.

 

புலியூர்ச் சிற்றம்பலத்தாய் புகலூர்ப் போதா மூதூரா

பொலிசேர் புரமூன்று எரியச்செற்ற புரிபுன் சடையானே

வலிசேர் அரக்கன் தடக்கை ஐஞ்ஞான்கு அடர்த்த மதிசூடீ

கலிசேர் புறவிற் கடவூரானே காண அருளாயே.

 

கைம்மா உரிவை அம்மான் காக்கும் பலவூர் கருத்துன்னி

மைம்மாந் தடங்கண் மதுரமன்ன மொழியாள் மடச்சிங்கடி

தம்மான் ஊரன் சடையன் சிறுவன் அடியன் தமிழ்மாலை

செம்மாந் திருந்து திருவாய் திறப்பார் சிவலோகத்தாரே.

திருச்சிற்றம்பலம்

 

சிவனுருவம்(1)

திருச்சிற்றம்பலம்

 

ஓர் உருவாயினை மான் ஆங்காரத்து

ஈரியல்பாய் ஒரு விண் முதல் பூதலம்

ஒன்றிய இருசுடர் உம்பர்கள் பிறவும்

படைத்து அளித்து அழிப்ப மும்மூர்த்திகள் ஆயினை

இருவரோடு ஒருவனாகி நின்றனை

 

ஓரார் நீழல் ஒண்கழல் இரண்டும்

முப்பொழுது ஏத்திய நால்வர்க்கு ஒளிநெறி

காட்டினை நாட்டம்  மூன்றாகக் கோட்டினை

இரு நதி அரவமோடு ஒரு மதி சூடினை

ஒருதாள் ஈரயின் மூவிலைச் சூலம்

 

நாற்கான் மான்மறி ஐந்தலை அரவம்

ஏந்தினை காய்ந்த நால்வாய் மும்மதத்து

இருகோட்டு ஒருகரி ஈடழித்து உரித்தனை

ஒரு தனு இருகால் வளைய வாங்கி

முப்புரத்தோடு நானிலம் அஞ்சக்

 

கொன்று தலத்துற அவுணரை அறுத்தனை

ஐம்புலன் நாலாம் அந்தக்கரணம்

முக்குணம் இருவளி  ஒருங்கிய வானோர்

ஏத்த நின்றனை  ஒருங்கிய மனத்தோடு

இருபிறப்பு ஓர்ந்து முப்பொழுது குறை முடித்து

 

நான்மறை ஓதி ஐவகை வேள்வி

அமைத்து ஆறங்கம் முதலெழுத்து ஓதி

வரன் முறை பயின்று எழுவான் தனை வளர்க்கும்

பிரமபுரம் பேணினை

அறுபதம் முரலும் வேணுபுரம் விரும்பினை

 

இகலிய மைந்துணர் புகலி அமர்ந்தனை

பொங்கு நாற்கடல் சூழ் வெங்குரு விளங்கினை

பாணி மூவுலகும் புதையமேல் மிதந்த

தோணிபுரத்து உறைந்தனை தொலையா இருநிதி

வாய்ந்த பூந்தராய் ஏய்ந்தனை

 

வரபுரம் ஒன்றுணர் சிரபுரத்து உறைந்தனை

ஒருமலை எடுத்த இருதிறல் அரக்கன்

விறல் கெடுத்து அருளினை புறவம் புரிந்தனை

முந்நீர்த் துயின்றோன் நான்முகன் அறியாப்

பண்பொடு நின்றனை சண்பை அமர்ந்தனை

 

ஐயுறும் அமணரும் அறுவகைத் தேரரும்

ஊழியும் உணராக் காழி அமர்ந்தனை

எச்சன் ஏழிசையோன் கொச்சையை மெச்சினை

ஆறு பதமும் ஐந்தமர் கல்வியும்

மறைமுதல் நான்கும்

 

மூன்று காலமும் தோன்ற நின்றனை

இருமையில் ஒருமையும் ஒருமையின் பெருமையும்

மறுவிலா மறையோர்

கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை

கழுமல முதுபதிக் கவுணியன் அறியும்

அனைய தன்மையை ஆதலின் நின்னை

நினைய வல்லவர் இல்லை நீணிலத்தே.

 

திருச்சிற்றம்பலம்

 

சிவனுருவம்(2)

 

திருச்சிற்றம்பலம்

 

வரிய மறையார் பிறையார் மலையோர் சிலையா வணக்கி

எரிய மதில்கள் எய்தார் எறியும் அசலம் உடையார்

கரிய மிடறும் உடையார் கடவூர் மயானம் அமர்ந்தார்

பெரிய விடைமேல் வருவார் அவர் எம் பெருமான் அடிகளே.

மங்கை மணந்த மார்பர் மழுவாள் வலன் ஒன்று ஏந்திக்

கங்கை சடையில் கரந்தார் கடவூர் மயானம் அமர்ந்தார்

செங்கண் வெள்ளேறு ஏறிச் செல்வம் செய்யா வருவார்

அங்கை யேறிய மறியார் அவர் எம் பெருமான் அடிகளே.

 

ஈடல் இடபம்  இசைய ஏறி மழு ஒன்றேந்திக்

காடது இடமா உடையார் கடவூர் மயானம் அமர்ந்தார்

பாடல் இசைகொள் கருவிபடு தம் பலவும் பயில்வார்

ஆடல் அரவம் உடையார் அவர் எம் பெருமான் அடிகளே.

 

இறை நின்று இலங்கு வளையாள் இளையாள் ஒருபால் உடையார்

மறை நின்று இலங்கு மொழியார் மலையார் மனத்தின் மிசையார்

கறை நின்று இலங்கு பொழில் சூழ் கடவூர் மயானம் அமர்ந்தார்

பிறை நின்று இலங்கு சடையார் அவர் எம் பெருமான் அடிகளே.

 

வெள்ளை எருத்தின் மிசையார் விரிதோடு ஒரு காது இலங்கத்

துள்ளும் இளமான் மறியார் சுடர்பொற் சடைகள் துளங்கக்

கள்ள நகுவெண் தலையார் கடவூர் மயானம் அமர்ந்தார்

பிள்ளை மதியம் உடையார் அவர் எம் பெருமான் அடிகளே.

 

பொன்தாது உதிரும் மணங்கொள் புனை பூங்கொன்றை புனைந்தார்

ஒன்றா வெள்ளேறு உயர்த்தது உடையார் அதுவே ஊர்வார்

கன்று ஆவினஞ்சூழ் புறவில் கடவூர் மயானம் அமர்ந்தார்

பின் தாழ் சடையார் ஒருவர் அவர் எம் பெருமான் அடிகளே.

 

பாசமான களைவார் பரிவார்க்கு அமுதம் அனையார்

ஆசை தீரக் கொடுப்பார் அலங்கல் விடைமேல் வருவார்

காசை மலர்போல் மிடற்றார் கடவூர் மயானம் அமர்ந்தார்

பேச வருவார் ஒருவர் அவர் எம் பெருமான் அடிகளே.

 

செற்ற அரக்கன் அலறத் திகழ் சேவடி மெல்விரலால்

கற்குன்று அடர்த்த பெருமான் கடவூர் மயானம் அமர்ந்தார்

மற்றொன்று இணையில் வலிய மாசில் வெள்ளி மலைபோல்

பெற்று ஒன்று  ஏறி வருவார்  அவர் எம் பெருமான் அடிகளே.

 

வருமா கரியின் உரியார் வளர்புன் சடையார் விடையார்

கருமான் உரிதோல் உடையார் கடவூர் மயானம் அமர்ந்தார்

திருமாலொடு நான்முகனுந் தேர்ந்துங் காண முன் ஒண்ணாப்

பெருமான் எனவும் வருவார் அவர் எம் பெருமான் அடிகளே.

 

தூய விடைமேல் வருவார் துன்னாருடைய மதில்கள்

காய வேவச் செற்றார் கடவூர் மயானம் அமர்ந்தார்

தீய கருமஞ் சொல்லுஞ் சிறுபுன் தேரர் அமணர்

பேய்பேயென்ன வருவார் அவர் எம் பெருமான் அடிகளே.

 

மரவம் பொழில்சூழ் கடவூர் மன்னு மயானம் அமர்ந்த

அரவமசைத்த பெருமான் அகலம் அறியலாகப்

பரவு முறையே பயிலும் பந்தன் செஞ்சொல் மாலை

இரவும் பகலும் பரவி நினைவார் வினைகள் இலரே.

திருச்சிற்றம்பலம்

 

சிவனுருவம்(3)

 

திருச்சிற்றம்பலம்

 

பாளையுடைக் கமுகு ஓங்கிப் பன்மாடம் நெருங்கி எங்கும்

வாளையுடைப் புனல் வந்து எறி வாழ் வயல் தில்லை தன்னுள்

ஆளவுடைக் கழல் சிற்றம்பலத்து அரன் ஆடல் கண்டால்

பீளையுடைக்கண்களால் பின்னைப் பேய்த்தொண்டர் காண்பதென்னே

 

பொருவிடை ஒன்றுடைப் புண்ணிய மூர்த்தி புலி அதளன்

உருவுடைய  அம்மலை மங்கை மணாளன் உலகுக்கு எல்லாம்

திருவுடை அந்தணர் வாழ்கின்ற தில்லைச் சிற்றம்பலவன்

திருவடியைக் கண்ட கண் கொண்டு மற்றினிக் காண்பதென்னே

 

தொடுத்த மலரொடு  தூபமும் சாந்தும் கொண்டு எப்பொழுதும்

அடுத்து வணங்கும் அயனொடு  மாலுக்கும் காண்பரியான்

பொடிக் கொண்டு அணிந்து பொன்னாகிய தில்லைச் சிற்றம்பலவன்

உடுத்த துகில் கண்ட கண் கொண்டு மற்றினிக் காண்பதென்னே

 

வைச்ச பொருள் நமக்காகும் என்றெண்ணி நமச்சிவாய

அச்சம் ஒழிந்தேன் அணி தில்லை அம்பலத்து ஆடுகின்ற

பிச்சன் பிறப்பிலி பேர் நந்தி உந்தியின் மேல் அசைத்த

கச்சின் அழகு கண்டால் பின்னைக் கண் கொண்டு காண்பதென்னே

 

செய்ஞ்ஞின்ற நீலம் மலர்கின்ற தில்லைச் சிற்றம்பலவன்

மைஞ்ஞின்ற ஒண்கண் மலைமகள் கண்டு மகிழ்ந்து நிற்க

நெய்ஞ்ஞின்று எரியும் விளக்கு ஒத்த நீலமணி மிடற்றன்

கைஞ்ஞின்ற ஆடல்கண்டால் பின்னைக் கண் கொண்டு காண்பதென்னே

 

ஊனத்தை நீக்கி உலகறிய என்னை ஆட்கொண்டவன்

தேன் ஒத்து எனக்கு இனியான் தில்லைச் சிற்றம்பலவன் எங்கோன்

வானத்தவர் உய்யவன் நஞ்சை உண்ட கண்டத்து இலங்கும்

ஏனத்து எயிறு கண்டால் பின்னைக் கண் கொண்டு காண்பதென்னே

 

தெரித்த கணையால் திரிபுரம் மூன்றும் செந்தீயின் மூழ்க  எரித்த

இறைவன் இமையவர் கோமான் இணையடிகள்

தரித்த மனத்தவர் வாழ்கின்ற தில்லைச் சிற்றம்பலவன்

சிரித்த முகம் கண்ட கண் கொண்டு மற்றினிக் காண்பதென்னே

 

சுற்றும் அமரர் சுரபதி நின் திருப்பாதம் அல்லால்

பற்று ஒன்று இலோம் என்று அழைப்பப் பரவையுள் நஞ்சை உண்டான்

செற்று அங்கு அனங்கனைத் தீ விழித்தான் தில்லையம்பலவன்

நெற்றியில்கண் கண்ட கண் கொண்டு மற்றினிக் காண்பதென்னே

 

சித்தத்து எழுந்த செழுங்கமலத்து அன்ன சேவடிகள்

வைத்த மனத்தவர் வாழ்கின்ற தில்லைச் சிற்றம்பலவன்

முத்தும் வயிரமும் மாணிக்கம் தன்னுள் விளங்கிய தூ

மத்த மலர் கண்ட கண் கொண்டு மற்றினிக் காண்பதென்னே

 

தருக்கு மிகுத்துத் தன் தோள்வலி உன்னித் தடவரையை

வரைக் கைககளால் எடுத்து ஆர்ப்ப மலைமகள் கோன் சிரித்து

அரக்கன் மணிமுடி பத்தும் அணி தில்லை அம்பலவன்

நெருக்கி மிதித்த விரல் கண்ட கண் கொண்டு காண்பதென்னே

 

திருச்சிற்றம்பலம்

 

 

சிவனுருவம்(4)

 

திருச்சிற்றம்பலம்

 

வடியேறு திரிசூலம்  தோன்றுந் தோன்றும்

வளர்சடைமேல் இளமதியம் தோன்றுந் தோன்றும்

கடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றும்

காதில்வெண் குழைதோடு கலந்து தோன்றும்

இடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும்

எழில்திகழும் திருமுடியும் இலங்கித் தோன்றும்

பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும்

பொழில்திகழும் பூவணத்து எம் புனித னார்க்கே.

 

ஆணாகிப் பெண்ணாய வடிவு தோன்றும்

அடியவர்கட்கு ஆரமுதமாகித் தோன்றும்

ஊணாகி ஊர் திரிவானாகித் தோன்றும்

ஒற்றை வெண்பிறை‌‌ தோன்றும் பற்றார் தம்மேல்

சேணாக வரைவில்லால் எரித்தல் தோன்றும்

செத்தவர் தம் எலும்பினால் செறியச் செய்த

பூணாணும் அரைஞாணும் பொலிந்து தோன்றும்

பொழில்திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.

 

கல்லாலின் நீழல் கலந்து தோன்றும்

கவின் மறையோர்  நால்வர்க்கு நெறிகள் அன்று

சொல்லாகச் சொல்லியவா தோன்றுந் தோன்றும்

சூழரவும் மான்மறியும்  தோன்றுந் தோன்றும்

அல்லாத காலனை முன் அடர்த்தல் தோன்றும்

ஐவகையால் நினைவார்பால் அமர்ந்து தோன்றும்

பொல்லாத புலால் எலும்பு பூணாய்த் தோன்றும்

பொழில்திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.

 

படைமலிந்த மழுவாளும் மானும் தோன்றும்

பன்னிரண்டு கண்ணுடைய பிள்ளை தோன்றும்

நடைமலிந்த விடையோடு கொடியும் தோன்றும்

நான்மறையின் ஒலி தோன்றும் நயனம்  தோன்றும்

உடைமலிந்த கோவணமும் கீளுந் தோன்றும்

மூரல்வெண் சிரமாலை உலாவித் தோன்றும்

புடைமலிந்த பூதத்தின் பொலிவு தோன்றும்

பொழில்திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.

 

மயலாகும் தன்னடியார்க்கு அருளும் தோன்றும்

மாசிலாப் புன்சடைமேல் மதியம் தோன்றும்

இயல்பாக இடுபிச்சை ஏற்றல் தோன்றும்

இருங்கடல் நஞ்சுண்டு இருண்ட கண்டம் தோன்றும்

கயல்பாயக் கடுங்கலுழிக் கங்கை நங்கை

ஆயிரமா முகத்தினொடு வானில் தோன்றும்

புயல்பாயச் சடைவிரித்த பொற்புத் தோன்றும்

பொழில்திகழும் பூவணத்து எம் புனித னார்க்கே.

 

பாராழி வட்டத்தார் பரவி யிட்ட

பல் மலரும் நறும்புகையும் பரந்து தோன்றும்

சீராழித் தாமரையின் மலர்கள் அன்ன

திருந்தியமா நிறத்த சேவடிகள் தோன்றும்

ஓராழித் தேருடைய இலங்கை வேந்தன்

உடல்துணித்த இடர் பாவம் கெடுப்பித்து அன்று

போராழி முன்ஈந்த பொற்புத் தோன்றும்

பொழில்திகழும் பூவணத்து எம் புனித னார்க்கே.

 

தன்னடியார்க்கு அருள்புரிந்த தகவு தோன்றும்

சதுர்முகனைத் தலையரிந்த தன்மை தோன்றும்

மின்னனைய நுண்ணிடையாள் பாகம் தோன்றும்

வேழத்தின் உரிவிரும்பிப் போர்த்தல் தோன்றும்

துன்னிய செஞ்சடை மேல் ஓர் புனலும் பாம்பும்

தூய மாமதியுடனே வைத்தல் தோன்றும்

பொன்னனைய திருமேனி பொலிந்து தோன்றும்

பொழில்திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.

 

செறிகழலும் திருவடியும்  தோன்றுந் தோன்றும்

திரிபுரத்தை எரிசெய்த சிலையும் தோன்றும்

நெறியதனை விரித்துரைத்த நேர்மை தோன்றும்

நெற்றிமேல் கண்தோன்றும் பெற்றம்  தோன்றும்

மறுபிறவி அறுத்தருளும் வகையும் தோன்றும்

மலைகளும் சலமகளும் மலிந்து தோன்றும்

பொறியரவும் இளமதியும் பொலிந்து தோன்றும்

பொழில்திகழும் பூவணத்து எம் புனிதனனார்க்கே.

 

அருப்போட்டு முலைமடவாள் பாகம் தோன்றும்

அணிகிளரும் உரும் என்ன அடர்க்கும் கேழல்

மருப்போட்டு மணிவயிரக் கோவை தோன்றும்

மணமலிந்த நடந்தோன்றும் மணியார் வைகைத்

திருக்கோட்டில் நின்றதோர் திறமும் தோன்றும்

செக்கர் வானொளி மிக்குத் திகழ்ந்த சோதிப்

பொருப்போட்டி நின்ற திண் புயமும் தோன்றும்

பொழில்திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.

 

ஆங்கணைந்த சண்டிக்கும் அருளி அன்று

தன்முடிமேல் அலர்மாலை அளித்தல் தோன்றும்

பாங்கணைந்து பணிசெய்வார்க்கு அருளி அன்று

பலபிறவி  அறுத்தருளும் பரிசும் தோன்றும்

கோங்கணைந்த கூவிளமும் மதமத்தம்மும்

குழற்கணிந்த கொள்கையொடு கோலம் தோன்றும்

பூங்கணைவேள் உருவழித்த பொற்பும் தோன்றும்

பொழில்திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.

 

ஆருருவ உள்குவார் உள்ளத்து உள்ளே

அவ்வுருவாய் நிற்கின்ற அருளும் தோன்றும்

வாருருவப் பூண்முலை நன் மங்கை தன்னை

மகிழ்ந்து ஒருபால் வைத்து உகந்த வடிவம் தோன்றும்

நீருருவக் கடல் இலங்கை அரக்கர் கோனை

நெறுநெறென அடர்த்திட்ட நிலையும் தோன்றும்

போருருவக் கூற்று உதைத்த பொற்புத் தோன்றும்

பொழில்திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே

 

திருச்சிற்றம்பலம்

 

 

 

 

 

 

சிவனுருவம்(5)

 

திருச்சிற்றம்பலம்


மருவார் கொன்றை மதிசூடி மாணிக்கத்தின் மலைபோல

வருவார் விடைமேல் மாதோடுமகிழ்ந்து பூதப்படை சூழத்

திருமால் பிரமன் இந்திரற்கும் தேவர் நாகர் தானவர்க்கும்

பெருமான் கடவூர் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே.

 

விண்ணோர் தலைவர் வெண்புரிநூல் மார்பர் வேத கீதத்தர்

கண்ணார் நுதலர் நகுதலையர் காலகாலர் கடவூரர்

எண்ணார் புரம் மூன்று எரிசெய்த இறைவர் உமையோர் ஒருபாகம்

பெண் ஆண் ஆவர் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே.

 

காயும் புலியின் அதள் உடையர் கண்டர் எண்டோள் கடவூரர்

தாயும்  தந்தை பல்லுயிர்க்கும் தாமேயாய தலைவனார்

பாயும் விடை ஒன்று அது ஏறிப் பலிதேர்ந்து  உண்ணும் பரமேட்டி

பேய்கள் வாழும் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே.

 

நறைசேர் மலர் ஐங்கணையானை நயனத்தீயால்  பொடி செய்த

இறையார் ஆவர் எல்லார்க்கும் இல்லை என்னாது அருள்செய்வார்

பறையார் முழவம் பாட்டோடு பயிலும் தொண்டர் பயில் கடவூர்ப்

பிறையார் சடையார் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே.

 

கொத்தார் கொன்றை மதிசூடிக் கோள் நாகங்கள் பூணாக

மத்த யானை உரிபோர்த்து மருப்பும் ஆமைத் தாலியார்

பத்தி செய்து பாரிடங்கள் பாடியாடப்  பலிகொள்ளும்

பித்தர் கடவூர் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே.

 

துணிவார் கீளும் கோவணமும்  துதைந்து சுடலைப் பொடியணிந்து

பணிமேல் இட்ட பாசுபதர் பஞ்சவடி மார்பினர் கடவூர்த்

திணிவார் குழையார் புரம்மூன்றும் தீவாய்ப் படுத்த சேவகனார்

பிணிவார் சடையார் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே.

 

காரார் கடலின் நஞ்சுண்ட கண்டர் கடவூர் உறைவாணர்

தேரார் அரக்கன் போய்வீழ்ந்து சிதைய விரலால் ஊன்றினார்

ஊர்தானாவது  உலகேழும் உடையார்க்கு ஒற்றியூர் ஆரூர்

பேராயிரவர் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே.

 

வாடா முலையாள் தன்னோடும் மகிழ்ந்து கானில் வேடுவனாய்க்

கோடார் கேழற் பின்சென்று குறுகி விசயன் தவமழித்து

நாடா வண்ணஞ் செருச்செய்து ஆவ நாழி நிலையருள்செய்

பீடார் சடையார் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே.

 

வேழம் உரிப்பர் மழுவாளர் வேள்வி அழிப்பர் சிரம் அறுப்பர்

ஆழி அளிப்பர் அரிதனக்கு ஆனஞ்சு உகப்பர் அறம் உரைப்பர்

ஏழை தலைவர் கடவூரில் இறைவர் சிறுமான் மறிக்கையர்

பேழைச் சடையர் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே.

 

மாட மல்கு கடவூரின் மறையோர் ஏத்தும் மயானத்துப்

பீடை தீர அடியாருக்கு அருளும் பெருமான் அடிகள் சீர்

நாடி நாவலாரூரன் நம்பி சொன்ன நற்றமிழ்கள்

பாடும் அடியார் கேட்பார் மேற்பாவமான பறையுமே.

திருச்சிற்றம்பலம்

 

திருவடிகள்(1)

 

திருச்சிற்றம்பலம்

 

பொடியுடை மார்பினர் போர்விடை ஏறிப் பூத கணம் புடை சூழக்

கொடியுடை ஊர்திரிந்து ஐயங்கொண்டு பலபல கூறி

வடிவுடை வாள் நெடுங் கண் உமைபாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்க்

கடிகமழ் மாமலரிட்டுக் கறை மிடற்றான் அடி காண்போம். 

அரைகெழு கோவண ஆடையின் மேலோர் ஆடரவம் அசைத்து ஐயம்

புரைகெழு வெண்தலை ஏந்திப் போர்விடை ஏறிப் புகழ

வரைகெழு மங்கையதாக ஓர் பாகம் ஆயவன் வாழ்கொளி புத்தூர்

விரைகமழ் மாமலர் தூவி விரிசடையான் அடி சேர்வோம்.

  

பூண்நெடு நாகம் அசைத்து அனல் ஆடிப் புன்தலை அங்கையில் ஏந்தி

ஊண்இடு பிச்சை ஊர் ஐயம் உண்டி என்று பல கூறி

வாள்நெடுங்கண் உமை மங்கைஓர் பாகமாயவன் வாழ்கொளிபுத்தூர்த்

தாள் நெடு மாமலரிட்டுத் தலைவன் தாள் நிழல் சார்வோம். 

 

தாரிடு கொன்றை ஓர் வெண்மதி கங்கை தாழ்சடை மேல் அவை சூடி

ஊர் இடு பிச்சைகொள் செல்வம் உண்டி என்று பல கூறி

வார் இடு மென்முலை மாதொரு பாகமாயவன் வாழ்கொளிபுத்தூர்க்

காரிடு மாமலர் தூவிக் கறை மிடற்றான் அடி காண்போம்.

 

கனமலர்க் கொன்றை அலங்கல் இலங்கக் காதில் ஓர் வெண்குழையோடு

புனமலர் மாலை புனைந்து ஊர் புகுதி என்றே பல கூறி

வனமுலை மாமலை மங்கை ஓர் பாகமாயவன் வாழ்கொளிபுத்தூர்

இனமலர் ஏய்ந்தன தூவி எம்பெருமான் அடி சேர்வோம். 

 

அளைவளர் நாகம் அசைத்து அனல் சூடி அலர்மிசை அந்தணன் உச்சிக்

களை தலையில் பலி கொள்ளும் கருத்தனே கள்வனே என்னா

வளைபொலி முன் கை மடந்தை ஓர் பாகமாயவன் வாழ்கொளிபுத்தூர்த்

தளை அவிழ் மாமலர் தூவித் தலைவன்  தாளிணை சார்வோம்.

 

அடர்செவி வேழத்தின் ஈருரி போர்த்து அழிதலை அங்கையில் ஏந்தி

உடல் இடு பிச்சையோடு ஐயம் உண்டி என்று பல கூறி

மடல்நெடு மாமலர்க்கண்ணி ஓர் பாகமாயவன் வாழ்கொளிபுத்தூர்த்

தட மலராயின தூவித் தலைவன் தாள்நிழல் சார்வோம். 

 

உயர்வரை ஒல்க எடுத்த அரக்கன் ஒளிர் கட கக்கை அடர்த்து

அயல் இடு பிச்சையோடு ஐயம் ஆர்தலையென்று அடி போற்றி

வயல்விரி நீல நெடுங்கணி பாகமாயவன் வாழ்கொளிபுத்தூர்ச்

சய விரி மாமலர் தூவி தாழ்சடை யான் அடி சார்வோம். 

 

கரியவன் நான்முகன் கைதொழுது ஏத்தக் காணலும்  சாரலும் ஆகா

எரி உருவாகி ஊர் ஐயம் இடுபலி உண்ணி என்று ஏத்தி

வரியரவு அல்குல் மடந்தை ஓர் பாகமாயவன் வாழ்கொளிபுத்தூர்

விரி மலராயின தூவி விகிர்தன சேவடி சேர்வோம். 

 

குண்டு அமணர் துவர்க் கூறைகள் மெய்யில் கொள்கையினார் புறங் கூற

வெண்தலையில் பலி கொண்டல் விரும்பினை என்று விளம்பி

வண்டமர் பூங்குழல் மங்கை ஓர் பாகமாயவன் வாழ்கொளிபுத்தூர்த்

தொண்டர்கள் மாமலர் தூவத் தோன்ற நின்றான் அடி சேர்வோம். 

 

கல்லுயர் மாக்கடல் நின்று முழங்கும் கரைபொரு காழிய மூதூர்

நல்லுயர் நான்மறை நாவின் நற்றமிழ் ஞானசம்பந்தன்

வல்லுயர் சூலமும் வெண் மழுவாளும் வல்லவன் வாழ்கொளிபுத்தூர்ச்

சொல்லிய பாடல்கள் வல்லார் துயர் கெடுதல் எளிதாமே.

 

திருச்சிற்றம்பலம்

 

திருவடிகள் (2)

திருச்சிற்றம்பலம்

 

அரவணையான் சிந்தித்து அரற்றும் அடி

அருமறையான் சென்னிக்கு அணியாம் அடி

சரவணத்தான் கை தொழுது சாரும் அடி

சார்ந்தார்கட்கு எல்லாம் சரணாம் அடி

பரவுவார் பாவம் பறிக்கும் அடி

பதினெண் கணங்களும் பாடும் அடி

விரவு  நீர்த் தென்கெடில நாடன் அடி

திருவீரட்டானத்து எம் செல்வன் அடி

 

கொடுவினையார் என்றும் குறுகா அடி

குறைந்துஅடைந்தார் ஆழாமைக் காக்கும் அடி

படு முழவம் பாணி பயிற்றும் அடி

பதைத்து எழுந்த வெங்கூற்றைப் பாய்ந்த அடி

கடுமுரண் ஏறு ஊர்ந்தான் கழல் சேவடி

கடல் வையம் காப்பான் கருதும் அடி

நெடு மதியம் கண்ணி அணிந்தான் அடி

நிறை கெடில வீரட்டம் நீங்கா அடி

 

வைதெழுவார் காமம் பொய் போகா அடி

வஞ்சவலைப்பாடு ஒன்றில்லா அடி

கைதொழுது நாம் ஏத்திக் காணும் அடி

கணக்கு வழக்கைக் கடந்த அடி

நெய் தொழுது நாம் ஏத்தி ஆட்டும் அடி

நீள்விசும்பை ஊடறுத்து நின்ற அடி

தெய்வப் புனல் கெடில நாடன் அடி

திருவீரட்டானத்து எம் செல்வன் அடி

 

அரும்பித்த செய் ஞாயிறு ஏய்க்கும் அடி

அழகு எழுதலாகா அருட் சேவடி

சுரும்பித்த வண்டினங்கள் சூழ்ந்த அடி

சோமனையும் காலனையும் காய்ந்த அடி

பெரும் பித்தர் கூடிப் பிதற்றும் அடி

பிழைத்தார் பிழைப்பு அறிய வல்ல அடி

திருந்து நீர் தென்கெடில நாடன் அடி

திருவீரட்டானத்து எம் செல்வன் அடி

 

ஒரு காலத்து ஒன்றாகி நின்ற அடி

ஊழி தோறு ஊழி உயர்ந்த அடி

பொரு கழலும் பல் சிலம்பும் ஆர்க்கும் அடி

புகழ்வார் புகழ் தகைய வல்ல அடி

இருநிலத்தார் இன்புற்று அங்கு ஏத்தும் அடி

இன்புற்றார் இட்ட பூ ஏறும் அடி

திருவதிகைத் தென்கெடில நாடன் அடி

திருவீரட்டானத்து எம் செல்வன் அடி

      

திருமகட்கு செந்தாமரையாம் அடி

சிறந்தவர்க்குத் தேனாய் விளைக்கும் அடி

பொருளவர்க்குப் பொன்னுரையாய் நின்ற அடி

புகழ்வார் புகழ் தகைய வல்ல அடி

உருவிரண்டும் ஒன்றோடு ஒன்று ஒவ்வா அடி

உருவென்று உணரப்படாத அடி

திருவதிகைத் தென்கெடில நாடன் அடி

திருவீரட்டானத்து எம் செல்வன் அடி

 

உரைமாலை எல்லாம் உடைய அடி

உரையால்உணரப் படாத அடி

வரை மாதை வாடாமை வைக்கும் அடி

வானவர்கள்தாம் வணங்கி வாழ்த்தும் அடி

அரை மாத்திரையில் அடங்கும் அடி

அகலம் அளக்கிற்பார் இல்லா அடி

கரை மாங்கலிக் கெடில நாடன் அடி

கமழ் வீரட்டானக் கபாலி அடி

 

நறுமலராய் நாறும் மலர்ச் சேவடி

நடுவாய் உலகநாடாய அடி

செறி கதிரும் திங்களுமாய் நின்ற அடி

தீத்திரளாய் உள்ளே திகழ்ந்த அடி

மறுமதியை மாசு கழுவும் அடி

மந்திரமும் தந்திரமும் ஆய அடி

எறிகெடில நாடர் பெருமான் அடி

திருவீரட்டானத்து எம் செல்வன் அடி

   

அணியனவும் சேயனவும் அல்லா அடி

அடியார்கட்கு ஆரமுதம் ஆய அடி

பணிபவர்க்குப் பாங்காக வல்ல அடி

பற்றற்றார் பற்றும் பவள அடி

மணியடி பொன்னடி மாண்பாம் அடி

மருந்தாய்ப் பிணி தீர்க்கவல்ல அடி

தணிபாடு தண்கெடில நாடன் அடி

தகை சார் வீரட்டத் தலைவன் அடி   

அந்தாமரைப் போது அலர்ந்த அடி

அரக்கனையும்ஆற்றல் அழித்த அடி

முந்தாகி முன்னே முளைத்த அடி

முழங்கு அழலாய் நீண்ட எம் மூர்த்தி அடி

பந்தாடு மெல்விரலாள் பாகன் அடி

பவளத் தடவரையே போல்வான் அடி

வெந்தார் சுடலை நீறு ஆடும் அடி

வீரட்டம் காதல் விமலன் அடி

 

திருச்சிற்றம்பலம்

 

 

திருவடிகள்(3)

 

திருச்சிற்றம்பலம்

 

அந்தணாளன் உன் அடைக்கலம் புகுத,

அவனைக் காப்பது காரணமாக,

வந்த காலன் தன்ஆருயிர் அதனை

வவ்வினாய்க்கு, உன்தன் வண்மை கண்டு அடியேன்,                                                                                 

எந்தை! நீ எனை நமன் தமர் நலியின்,

இவன் மற்று என் அடியான்” என விலக்கும்

சிந்தையால் வந்து, உன் திருவடி அடைந்தேன்

செழும் பொழில் திருப்புன்கூர் உளானே!

       

வையகம் முற்றும் மாமழை மறந்து,

வயலில் நீர் இலை; மாநிலம் தருகோம்;

உய்யக் கொள்க, மற்று எங்களை!” என்ன,

ஒளி கொள் வெண்முகிலாய்ப் பரந்து எங்கும்

பெய்யும் மா மழைப் பெரு வெள்ளம் தவிர்த்து,

பெயர்த்தும் பன்னிரு வேலி கொண்டு அருளும்                                                                                         

செய்கை கண்டு, நின் திருவடி அடைந்தேன்

செழும் பொழில் திருப்புன்கூர் உளானே!

 

ஏதம் நன்னிலம் ஈர்அறு வேலி

ஏயர்கோன் உற்ற இரும்பிணி தவிர்த்து

கோதனங்களின் பால் கறந்து ஆட்டக்

கோவெண்மணல் சிவன் தன்மேல் சென்ற

தாதை தாள் அற எறிந்த தண்டிக்கு உன்

சடைமிசை மலர் அருள் செயக் கண்டு,

பூத ஆளி நின் பொன்னடி அடைந்தேன்

பூம்பொழில் திருப்புன்கூர் உளானே!

 

நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தன்,

நாவினுக்கு அரையன், நாளைப் போவானும்,

கற்ற சூதன், நல் சாக்கியன், சிலந்தி,

கண்ணப்பன், கணம் புல்லன், என்று இவர்கள்

குற்றம் செய்யினும் குணம் எனக் கருதும்

கொள்கை கண்டு, நின் குரை கழல் அடைந்தேன்                                                                              

பொன்திரள் மணிக் கமலங்கள் மலரும்

பொய்கை சூழ் திருப்புன்கூர் உளானே!

 

கோல மால் வரை மத்தென நாட்டி,

கோள் அரவு சுற்றி, கடைந்து எழுந்த

ஆல நஞ்சு கண்டு அவர் மிக இரிய

அமரர்கட்கு அருள் புரிவது கருதி

நீலமார் கடல் விடந்தனை உண்டு,

கண்டத்தே வைத்த பித்த! நீ செய்த

சீலம் கண்டு, நின் திருவடி அடைந்தேன்

செழும்பொழில் திருப்புன்கூர் உளானே!

 

இயக்கர், கின்னரர், யமனொடு, வருணர்,

இயங்கு தீ, வளி, ஞாயிறு, திங்கள்

மயக்கமில் புலி, வானரம், நாகம், வசுக்கள்,

வானவர், தானவர், எல்லாம்

அயர்ப்பு ஒன்று இன்றி நின் திருவடி அதனை

அர்ச்சித்தார்; பெறும் ஆரருள் கண்டு,

திகைப்பு ஒன்று இன்றி நின் திருவடி அடைந்தேன்

செழும் பொழில் திருப் புன்கூர்  உளானே!                                                                                       

       

போர்த்த நீள் செவியாளர் அந்தணர்க்குப்

    பொழில் கொள் ஆல் நிழல் கீழ் அறம் புரிந்து

பார்த்தனுக்கு அன்று பாசுபதம் கொடுத்து

அருளினாய்  பண்டு பகீரதன் வேண்ட

ஆர்த்து வந்து இழியும் புனல் கங்கை

நங்கையாளை நின் சடைமிசைக் கரந்த

தீர்த்தனே! நின் தன் திருவடி அடைந்தேன்

செழும் பொழில் திருப்புன்கூர் உளானே!

       

மூ எயில் செற்ற ஞான்று உய்ந்த மூவரில்

    இருவர் நின் திருக்கோயிலின் வாய்தல்

காவலாளர் என்று ஏவிய பின்னை

ஒருவன் நீ கரிகாடு அரங்காக

மானை நோக்கி ஓர் மாநடம் மகிழ

மணி முழா முழக்க அருள் செய்த

தேவ தேவ! நின் திருவடி அடைந்தேன்

செழும் பொழில் திருப் புன்கூர் உளானே!

       

அறிவினால் மிக்க அறுவகைச் சமயம்

அவ் அவர்க்கு அங்கே ஆர் அருள் புரிந்து,

எறியும் மா கடல் இலங்கையர் கோனைத்

துலங்க மால் வரைக்கீழ் அடர்த்திட்டு,

குறி கொள் பாடலின் இன் இசை கேட்டு,

    கோல வாளொடு நாள் அது கொடுத்த

செறிவு கண்டு, நின் திருவடி அடைந்தேன்

செழும் பொழில் திருப்புன்கூர் உளானே!

 

       

கம்ப மால் களிற்றின் உரியானை,

காமன் காய்ந்தது ஓர் கண்ணுடையானை,

செம்பொனே ஒக்கும் திரு உருவானை,

செழும் பொழில் திருப்புன்கூர் உளானை,

உம்பர் ஆளியை  உமையவள் கோனை 

ஊரன் வன்தொண்டன் உள்ளத்தால் உகந்து

அன்பினால் சொன்ன அருந்தமிழ் ஐந்தோடு

ஐந்தும் வல்லவர் அருவினை இலரே

 

திருச்சிற்றம்பலம்

 

 

 

 

அருச்சனை(1)

 

திருச்சிற்றம்பலம்

 

பந்து சேர் விரலாள் பவளத்து உவர் வாயினாள்

பனிமா மதி போல் முகத்து

அந்தமில் புகழாள் மலை மாதொடும் ஆதிப்பிரான்

வந்து சேர்விடம் வானவர் எத்திசையும் நிறைந்து

வலம்  செய்து மாமலர்

புந்தி செய்து இறைஞ்சிப் பொழி பூந்தராய் போற்றுதுமே.

 

காவியங் கருங்கண்ணினாள் கனித்தொண்டை வாய்க்

கதிர் முத்தம் நல் வெண்ணகைத்

தூவி அம்பெடை அன்னநடைச் சுரி மென்குழலாள்

தேவியும் திருமேனி ஓர் பாகமாய்ஒன்று இரண்டு

ஒரு மூன்றொடு சேர்பதி

பூவில் அந்தணன் ஒப்பவர் பூந்தராய் போற்றுதுமே.

 

பையர் அவரும் அல்குல் மெல்லியல் பஞ்சின் நேரடி

வஞ்சிகொள் நுண்ணிடைத்

தையலாள் ஒரு பாலுடை எம்மிறை சாருமிடம்

செய்யெலாங் கழுநீர் கமலம் மலர்த்தேறல் ஊறலில்

சேறு உலராத நல்

பொய்யிலா மறையோர் பயில் பூந்தராய் போற்றுதுமே.

 

முள்ளி நாண்முகை மொட்டியல் கோங்கின் அரும்பு

தேன்கொள் குரும்பை மூவாமருந்து

உள்ளி யன்ற பைம் பொற்கலசத்து இயல் ஒத்தமுலை

வெள்ளி மால்வரை அன்னதோர் மேனியின்

மேவினார் பதி வீ மரு தண்பொழில்

புள் இனந்துயில்  மல்கிய பூந்தராய் போற்றுதுமே.

பண்ணியன்று எழு மென்மொழியாள் பகர்

கோதை ஏர்திகழ் பைந்தளிர் மேனியோர்

பெண்ணியன்ற மொய்ம்பில் பெருமாற்கு இடம் பெய் வளையார்

கண் இயன்று எழு காவிச் செழுங்கரு

நீல மல்கிய காமரு வாவி நற்

புண்ணியர் உறையும்பதி பூந்தராய் போற்றுதுமே.

 

வாணிலா மதி போல் நுதலாள் மட

மாழை ஒண்கணாள் வண்தரளந் நகை

பாணி லாவிய இன்னிசையார் மொழிப் பாவையொடும்

சேணிலாத் திகழ் செஞ்சடை எம் அண்ணல்

சேர்வது சிகரம் பெருங் கோயில் சூழ்

போணிலா நுழையும் பொழில் பூந்தராய் போற்றுதுமே.

 

கார் உலாவிய வார்குழலாள் கயற்கண்ணினாள் புயற்

காலொளி மின்னிடை

வார் உலாவிய மென்முலையாள் மலைமாது உடனாய்

நீர் உலாவிய சென்னியன் மன்னி நிகரும் நாமம்

முந்நான்கு நிகழ்பதி

போருலா எயில் சூழ்பொழில் பூந்தராய் போற்றுதுமே.

 

காசை சேர்குழலாள் கயல் ஏர் தடங்கண்ணி

காம்பன தோள் கதிர் மென்முலைத்

தேசு சேர்மலை மாது அமரும் திருமார்பு ஆகலத்து

ஈசன் மேவும் இரும் கயிலை எடுத்தானை அன்று

அடர்த்தான் இணைச் சேவடி

பூசை செய்பவர் சேர் பொழில் பூந்தராய் போற்றுதுமே.

 

கொங்கு சேர் குழலாள் நிழல் வெண்ணகைக்

கொவ்வை வாய்க் கொடி ஏர் இடையாள்உமை

பங்கு சேர்திரு மார்புடையார் படர் தீ  உருவாய்

மங்குல் வண்ணனும் மாமலரோனும்

மயங்க நீண்டவர் வான் மிசை வந்து எழு

பொங்கு நீரின் மிதந்த நல் பூந்தராய் போற்றுதுமே.

 

கலவ மா மயிலார் இயலாள் கரும்பு அன்ன

மென்மொழியாள் கதிர் வாள்நுதல்

குலவு பூங்குழலாள் உமை கூறனை வேறுரையால்

அலவை சொல்லுவார் தேர் அமண் ஆதர்கள்

ஆக்கினான் தனை நண்ணலும் நல்கும் நல்

புலவர் தாம் புகழ் பொற்பதி பூந்தராய் போற்றுதுமே.

 

தேம்பல் நுண் இடையாள் செழுஞ் சேலன

கண்ணியோடு அண்ணல் சேர்விடம் தேன்அமர்

பூம்பொழில் திகழ் பொற்பதி பூந்தராய் போற்றுதும் என்று

ஓம்பு தன்மையன் முத்தமிழ் நான்மறை

ஞான சம்பந்தன் ஒண் தமிழ் மாலை‌ கொண்டு

ஆம்படி இவை ஏத்த வல்லார்க்கு அடையா வினையே.

 

திருச்சிற்றம்பலம்

 

அருச்சனை(2)

 

திருச்சிற்றம்பலம்

 

வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி

மீளாமே ஆள் என்னைக் கொண்டாய் போற்றி

ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி

ஓவாத சத்தத்து ஒலியே போற்றி

ஆற்றாகி அங்கே அமர்ந்தாய் போற்றி

ஆறங்கம் நால்வேதம் ஆனாய் போற்றி

காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி.

பிச்சாடல் பேயோடு உகந்தாய் போற்றி

பிறவியறுக்கும் பிரானே போற்றி

வைச்சாடல் நன்று மகிழ்ந்தாய் போற்றி

மருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி

பொய்ச்சார் புரமூன்றும் எய்தாய் போற்றி

போகாது என்சிந்தை புகுந்தாய் போற்றி

கச்சாக நாகம் அசைத்தாய் போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி.

 

மருவார் புரம்மூன்றும்  எய்தாய் போற்றி

மருவி என் சிந்தை புகுந்தாய் போற்றி

உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி

உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி

திருவாகி நின்ற திறமே போற்றி

தேசம் பரவப் படுவாய் போற்றி

கருவாகி ஓடும் முகிலே போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி.

 

வானத்தார் போற்றும் மருந்தே போற்றி

வந்து என்தன் சிந்தை புகுந்தாய் போற்றி

ஊனத்தை நீக்கும் உடலே போற்றி

ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி

தேனத்தை வார்த்த தெளிவே போற்றி

தேவர்க்குந் தேவனாய் நின்றாய் போற்றி

கானத்தீ ஆடல் உகந்தாய் போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி.

 

ஊராகி நின்ற உலகே போற்றி

ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி

பேராகி எங்கும் பரந்தாய் போற்றி

பெயராது என் சிந்தை புகுந்தாய் போற்றி

நீராவி யான நிழலே போற்றி

நேர்வார் ஒருவரையும்  இல்லாய் போற்றி

காராகி நின்ற முகிலே போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி.

 

சில்லுருவாய்ச் சென்று திரண்டாய் போற்றி

தேவர் ஆறியாத தேவே போற்றி

புல்லுயிர்க்கும் பூட்சி புணர்த்தாய் போற்றி

போகாது என் சிந்தை புகுந்தாய் போற்றி

பல்லுயிராய்ப் பார்தோறும் நின்றாய் போற்றி

பற்றி உலகை விடாதாய் போற்றி

கல்லுயிராய் நின்ற கனலே போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி.

பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி

பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி

எண்ணும் எழுத்தும்  சொல் ஆனாய் போற்றி

என்சிந்தை நீங்கா இறைவா போற்றி

விண்ணும் நிலனும் தீ ஆனாய் போற்றி

மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி

கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி

 

இமையா(து) உயிரா(து) இருந்தாய் போற்றி

என்சிந்தை நீங்கா இறைவா போற்றி

உமைபாகம் ஆகத்(து) அணைத்தாய் போற்றி

ஊழி ஏழான ஒருவா போற்றி

அமையா அருநஞ்சம் ஆர்ந்தாய் போற்றி

ஆதி புராணனாய் நின்றாய் போற்றி

கமையாகி நின்ற கனலே போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி.

 

மூவாய் பிறவாய் இறவாய் போற்றி

முன்னமே தோன்றி முளைத்தாய் போற்றி

தேவாதி தேவர் தொழுந் தேவே போற்றி

சென்று ஏறி எங்கும் பரந்தாய் போற்றி

ஆவா அடியேனுக்கு எல்லாம் போற்றி

அல்லல் நலிய அலந்தேன் போற்றி

காவாய் கனகத் திரளே போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி.

 

நெடிய விசும்போடு கண்ணே போற்றி

நீள அகலம் உடையாய் போற்றி

அடியும் முடியும் இகலி போற்றி

அங்கு ஒன்று அறியாமை நின்றாய் போற்றி

கொடியவன் கூற்றம் உதைத்தாய் போற்றி

கோயிலா என்சிந்தை கொண்டாய் போற்றி

கடிய உருமொடு மின்னே போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி.

 

உண்ணா(து) உறங்கா(து) இருந்தாய் போற்றி

ஓதாதே வேதம் உணர்ந்தாய் போற்றி

எண்ணா இலங்கைக்கோன் தன்னைப் போற்றி

இறைவிரலால் வைத்து உகந்த ஈசா போற்றி

     பண்ணார் இசையின் சொல்  கேட்டாய் போற்றி

பண்டே என் சிந்தை புகுந்தாய் போற்றி

கண்ணாய் உலகுக்கு நின்றாய் போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி.

 

திருச்சிற்றம்பலம்

 

 

அருச்சனை(3)

 

திருச்சிற்றம்பலம்

 

கொன்று செய்த கொடுமையால் பல சொல்லவே

நின்ற பாவ வினைகள் தாம் பல நீங்கவே

சென்று சென்று தொழுமின் தேவர் பிரானிடம்

கன்றினோடு பிடிசூழ் தண் கழுக்குன்றமே

 

இறங்கிச் சென்று தொழுமின் இன்னிசை பாடியே

பிறங்கு கொன்றைச் சடையன் எங்கள் பிரானிடம்

நிறங்கள் செய்த மணிகள் நித்திலம் கொண்டு இழி

கறங்கு வெள்ளை அருவித் தண் கழுக்குன்றமே

 

நீள நின்று தொழுமின் நித்தலும் நீதியால்

ஆளும் நம்ம வினைகள் அல்கி அழிந்திடத்

தோளும் எட்டும் உடைய  மாமணிச் சோதியான்

காள கண்டன் உறையும் தண் கழுக்குன்றமே

 

வெளிறு தீரத் தொழுமின் வெண்பொடி ஆடியை

முளிறு இலங்கு மழுவாளன் முந்தி உறைவிடம்

பிளிறு தீரப் பெருங்கைப் பெய்ம்மதம் மூன்றுடைக்

களிறினோடு பிடிசூழ் தண் கழுக்குன்றமே

 

புலைகள் தீரத் தொழுமின் புன்சடைப் புண்ணியன்

இலைகொள் சூலப்படையன் எந்தை பிரானிடம்

முலைகள் உண்டு தழுவுக் குட்டி யொடு முசுக்

கலைகள் பாயும் புறவில் தண் கழுக்குன்றமே

 

மடம் உடைய அடியார் தம்மனத்தே உற

விடம் உடைய மிடறன் விண்ணவர் மேலவன்

படம் உடைய அரவன் தான் பயிலும் இடம்

கடம் உடைய புறவில் தண் கழுக்குன்றமே

 

ஊனம் இல்லா அடியார் தம்மனத்தே உற

ஞான மூர்த்தி நட்டமாடி நவிலும் இடம்

தேனும் வண்டும் மது உண்டு இன்னிசை பாடவே

கான மஞ்ஞை உறையும் தண் கழுக்குன்றமே

 

அந்தம் இல்லா அடியார் தம்மனத்தே உற

வந்து நாளும் வணங்கி மாலொடு நான்முகன்

சிந்தை செய்த மலர்கள் நித்தலுஞ் சேரவே

சந்தம் நாறும் புறவில் தண் கழுக்குன்றமே

 

பிழைகள் தீரத் தொழுமின் பின்சடைப் பிஞ்ஞகன்

குழைகொள் காதன் குழகன் தான் உறையும் இடம்

மழைகள் சாலக் கலித்து நீடுயர் வேய் அவை

கழைகொள் முத்தம் சொரியுந் தண் கழுக்குன்றமே

 

பல்லின் வெள்ளைத் தலையன் தான்பயிலும் இடம்

கல்லின் வெள்ளை அருவித் தண் கழுக்குன்றினை

மல்லின் மல்கு திரள்தோள் ஊரன் வனப்பினால்

சொல்லல் சொல்லித் தொழுவாரைத் தொழுமின்களே

திருச்சிற்றம்பலம்

 

அடிமை(1)

 

திருச்சிற்றம்பலம்

 

வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்

மிகநல்ல  வீணை தடவி

மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என்

உளமே புகுந்த அதனால்

ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி

சனி பாம்பு இரண்டும் உடனே

ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல

அடியார் அவர்க்கு மிகவே.

 

என்பொடு கொம்பொடு ஆமை இவை மார்பு  இலங்க

எருது ஏறி ஏழை  உடனே

பொன்பொதி மத்த மாலை புனல்சூடி வந்து என்

உளமே புகுந்த அதனால்

ஒன்பது  ஒன்றொடு ஏழு பதினெட்டொடு ஆறும்

உடனாய நாள்கள் அவைதாம்

அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல

அடியார் அவர்க்கு மிகவே.

 

உருவளர் பவள மேனி ஒளி நீறணிந்து

உமையோடும் வெள்ளை விடைமேல்

முருகலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்தென்

உளமே புகுந்த அதனால்

திருமகள் கலையதூர்தி செயமாது பூமி

திசை தெய்வமான பலவும்

அருநெதி நல்ல நல்ல அவை நல்ல நல்ல

அடியார் அவர்க்கு மிகவே.

 

மதிநுதல் மங்கையோடு வடபால் இருந்து

மறையோதும் எங்கள் பரமன்

நதியொடு கொன்றை மாலை முடி மேல் அணிந்து என்

உளமே புகுந்த அதனால்

கொதியுறு காலன் அங்கி நமனோடு தூதர்

கொடு நோய்களான பலவும்

அதிகுணம் நல்ல நல்ல அவை நல்ல நல்ல

அடியார் அவர்க்கு மிகவே

நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும்

விடையேறு நங்கள் பரமன்

துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேல் அணிந்து என்

உளமே புகுந்த அதனால்

வெஞ்சின அவுணரோடு உரும் இடியும் மின்னும்

மிகையான பூதம் அவையும்

அஞ்சிடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல

அடியார் அவர்க்கு மிகவே

 

வாள் வரிய தள தாடை வரி கோவணத்தர்

மடவாள் தனோடு உடனாய்

நாள்மலர் வன்னி கொன்றை நதி சூடி வந்தென்

உளமே புகுந்த அதனால்

கோளரி உழுவையோடு கொலை யானை கேழல்

கொடு நாகமோடு கரடி

ஆளரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல

அடியார் அவர்க்கு மிகவே

 

செப்பிள முலை நல்மங்கை  ஒரு பாகமாக

விடையேறு செல்வன் அடைவார்

ஒப்பிள மதியும் அப்பும் முடி மேல் அணிந்து என்

உளமே புகுந்த அதனால்

வெப்பொடு குளிரும் வாத மிகையான பித்தும்

வினையான வந்து நலியா

அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல

அடியார் அவர்க்கு மிகவே

 

வேள்பட விழிசெய்து அன்று விடைமேல் இருந்து

மடவாள் தனோடும் உடனாய்

வாள்மதி வன்னி கொன்றை மலர்சூடி வந்தென்

உளமே புகுந்த அதனால்

ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன் தனோடும்

இடரான வந்து நலியா

ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல

அடியார் அவர்க்கு மிகவே

 

பலபல  வேடமாகும் பரனாரி பாகன்

பசு ஏறும் எங்கள் பரமன்

சல மகளோடு எருக்கு முடிமேல் அணிந்து என்

உளமே புகுந்த அதனால்

மலர்மிசையோன் மால் மறையோடு தேவர்

வரு காலமான பலவும்

அலைகடல் மேரு நல்ல அவை நல்ல நல்ல

அடியார் அவர்க்கு மிகவே

 

கொத்தலர் குழலியோடு விசையற்கு  நல்கு

குணமாய வேட விகிர்தன்

மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்து என்

உளமே புகுந்த அதனால்

புத்தரோடு அமணைவாதில் அழிவிக்கும் அண்ணல்

திருநீறு செம்மை திடமே

அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல

அடியார் அவர்க்கு மிகவே

 

தேனமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி

வளர் செம்பொன் எங்கும் நிகழ

நான்முகன் ஆதியாய பிரமா புரத்து

மறைஞான ஞான முனிவன்

தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து

நலியாத வண்ணம் உரைசெய்

ஆன சொல்மாலை ஓதும் அடியார்கள் வானில்

அரசாள்வர் ஆணை நமதே!

திருச்சிற்றம்பலம்

 

அடிமை(2)

 

திருச்சிற்றம்பலம்

 

குலம் பலம் பாவரு குண்டர்முன்னே நமக்கு உண்டுகொலோ

அலம்பு அலம்பா வரு தண்புனல் ஆரூர் அவிர்சடையான்

சிலம்பு அலம்பா வரு சேவடியான் திரு மூலட்டானம்

புலம்பு அலம்பா வரு தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே

       

மற்று இடம் இன்றி மனை துறந்து அல் உணா வல் அமணர்

சொல்திடம் என்று துரிசுபட்டேனுக்கும் உண்டுகொலோ

வில்திடம் வாங்கி விசயனொடு அன்று ஒரு வேடுவனாய்

புற்றுஇடம்கொண்டான் தன் தொண்டர்க்குத்தொண்டராம் புண்ணியமே

 

ஒரு வடிவு இன்றி நின்று உண் குண்டர்முன் நமக்கு உண்டுகொலோ

செரு வடி வெஞ்சிலையால் புரம் அட்டவன் சென்று அடையாத்

திரு உடையான் திரு ஆரூர்த் திருமூலட்டானன் செங்கண்

பொரு விடையான் அடித்தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே

 

மாசினை ஏறிய மேனியர் வன்கண்ணர் மொண்ணரை விட்டு

ஈசனையே நினைந்து ஏசறுவேனுக்கும் உண்டுகொலோ

தேசனை ஆரூர்த் திருமூலட்டானனை சிந்தைசெய்து

பூசனைப் பூசுரர் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே

 

அருந்தும்பொழுது உரையாடா அமணர் திறம் அகன்று

வருந்தி நினைந்து, “அரனே!” என்று வாழ்த்துவேற்கு உண்டுகொலோ

திருந்திய மா மதில் ஆரூர்த் திருமூலட்டானனுக்குப்

பொருந்தும் தவம் உடைத் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே

       

வீங்கிய தோள்களும் தாள்களுமாய் நின்று, வெற்று அரையே

மூங்கைகள் போல் உண்ணும் மூடர்முன்னே நமக்கு உண்டு கொலோ

தேம் கமழ் சோலைத் தென் ஆரூர்த் திருமூலட்டானன் செய்ய

பூங்கழலான் அடித் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே

   

பண்ணிய சாத்திரப் பேய்கள் பறி தலைக் குண்டரை விட்டு

எண் இல் புகழ் ஈசன்தன் அருள் பெற்றேற்கும் உண்டுகொலோ

திண்ணிய மா மதில் ஆரூர்த் திருமூலட்டானன் எங்கள்

புண்ணியன் தன் அடித்தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே

       

கரப்பர்கள் மெய்யை “தலை பறிக்கச் சுகம்” என்னும் குண்டர்

உரைப்பன கேளாது இங்கு உய்யப் போந்தேனுக்கும் உண்டுகொலோ

திருப்பொலி ஆரூர்த் திருமூலட்டானன் திருக்கயிலைப்

பொருப்பன் விருப்பமர் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே

 

கையில் இடு சோறு நின்று உண்ணும் காதல் அமணரை விட்டு

உய்யும் நெறி கண்டு இங்கு உய்யப் போந்தேனுக்கும் உண்டுகொலோ

ஐயன் அணி வயல் ஆரூர்த் திருமூலட்டானனுக்குப்

பொய் அன்பு இலா அடித்தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே

       

குற்றம் உடைய அமணர் திறம் அது கை அகன்றிட்டு

உற்ற கருமம் செய்து  உய்யப் போந்தேனுக்கும் உண்டுகொலோ

மல் பொலி தோளான் இராவணன் தன் வலி ஆட்டுவித்த

பொன் கழலான் அடித் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே

திருச்சிற்றம்பலம்

 

அடிமை(3)

 

திருச்சிற்றம்பலம்

 

தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்

திரு நீலகண்டத்துக் குயவனார்க்கு அடியேன்                                                                                       

இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்

இளையான்தன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன் 

வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன்                                                          

விரி பொழில் சூழ் குன்றையார் விறல் மிண்டற்கு அடியேன்                                                                         

அல்லி மென் முல்லையந்தார் அமர் நீதிக்கு அடியேன்

ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு  ஆளே                                                                                         

       

இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தற்கு அடியேன்

ஏனாதி நாதன் தன் அடியார்க்கும் அடியேன்                                                                                           

கலை மலிந்த சீர் நம்பி கண்ணப்பற்கு அடியேன்

    கடவூரில் கலயன் தன் அடியார்க்கும்  அடியேன்                                                                                           

மலை மலிந்த தோள் வள்ளல் மானக்கஞ்சாறன்

எஞ்சாத வாள்தாயன் அடியார்க்கும் அடியேன்                                                                                          

அலை மலிந்த புனல் மங்கை ஆனாயற்கு அடியேன்

ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு  ஆளே                                                                                          

 

மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்

முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும்  அடியேன்                                                                                          

செம்மையே திருநாளைப் போவார்க்கும் அடியேன் 

திருக்குறிப்புத் தொண்டர் தம்  அடியார்க்கும் அடியேன்;                                                                          

மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க

வெகுண்டு எழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த                                                                                           

அம்மையான் அடி சண்டிப் பெருமானுக்கு அடியேன்

ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே                                                                                            

 

திரு நின்ற செம்மையே செம்மையாக் கொண்ட

திருநாவுக்கரையன் தன் அடியார்க்கும்  அடியேன்                                                                                          

பெரு நம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன்

பெரு மிழலைக் குறும்பற்கும்  பேயார்க்கும் அடியேன்                                                                      

ஒரு நம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்

ஒலி புனல் சூழ் சாத்த மங்கை நீல நக்கற்கு அடியேன்                                                                                            அரு நம்பி நமி நந்தி அடியார்க்கும் அடியேன்

ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு   ஆளே                                                                                         

வம்பு அறா வரிவண்டு மணம் நாற மலரும்

மது மலர் நல் கொன்றையான் அடியலால் பேணா                                                                                         

எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்

ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும்  அடியேன்                                                                                           

நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்

நாட்டம் மிகு தண்டிக்கும் மூர்க்கற்கும்  அடியேன்                                                                                         அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன்

ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே

 

வார் கொண்ட வன முலையாள் உமை பங்கன் கழலே

மறவாது கல் எறிந்த சாக்கியற்கும் அடியேன்                                                                         சீர் கொண்ட புகழ் வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்

செங்காட்டங்குடி மேய  சிறுத்தொண்டற்கு அடியேன்                                                                 

கார் கொண்ட கொடை கழறிற்று அறிவாற்கும் அடியேன்

கடல் காழி கணநாதன்  அடியார்க்கும் அடியேன்;                                                                     

ஆர் கொண்ட வேல் கூற்றன் களந்தைக் கோன் அடியேன்

ஆரூரன் ஆரூரில்   அம்மானுக்கு ஆளே                                                                           

       

பொய் அடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன்

பொழில் கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழற்கு அடியேன்                                                                

மெய் அடியான் நரசிங்கமுனை யரையற்கு  அடியேன்

விரி திரை சூழ் கடல் நாகை அதிபத்தற்கு அடியேன்                                                                         

கை தடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன் கழல் சத்தி

         வரிஞ்சையர்கோன்   அடியார்க்கும் அடியேன்;                                                                       

ஐயடிகள் காடவர் கோன் அடியார்க்கும் அடியேன் 

ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு   ஆளே                                                                                         

 

கறைக் கண்டன் கழல் அடியே காப்புக் கொண்டிருந்த

கணம்புல்ல நம்பிக்கும் காரிக்கும்    அடியேன்                                                                                      

நிறைக் கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற

நின்ற சீர் நெடுமாறன் அடியார்க்கும்  அடியேன்                                                                                          

துறைக் கொண்ட செம்பவளம் இருள் அகற்றும் சோதித்

தொல்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்;                                                                  

அறைக் கொண்ட வேல் நம்பி முனையடுவாற்கு அடியேன்

ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே                                                                        

 

கடல் சூழ்ந்த உலகு எலாம் காக்கின்ற பெருமான்

காடவர் கோன் கழற்சிங்கன்  அடியார்க்கும் அடியேன்;                                                                          

மடல் சூழ்ந்ததார் நம்பி இடங்கழிக்கும், தஞ்சை மன்னவனாம்

செருத்துணை தன் அடியார்க்கும் அடியேன்;                                                                      

புடை சூழ்ந்த புலி அதள் மேல் அரவு ஆட ஆடி

பொன் அடிக்கே மனம் வைத்த புகழ்த் துணைக்கும் அடியேன்                                                                            அடல் சூழ்ந்த வேல் நம்பி கோட்புலிக்கும் அடியேன்

    ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு   ஆளே                                                                                          

       

பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்

பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்                                                                                         

சித்தத்தைச் சிவன் பாலே வைத்தார்க்கும் அடியேன்

திருவாரூர்ப் பிறந்தார்கள்  எல்லார்க்கும் அடியேன்                                                                        

முப்போதும் திருமேனி தீண்டுவார்க்கு அடியேன்

முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்

அப்பாலும் அடிச் சார்ந்த அடியார்க்கும் அடியேன்

ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு   ஆளே                                                                                         

       

மன்னிய சீர் மறை நாவன் நின்றவூர் பூசல்

வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்                                                                                    

தென்னவனாய் உலகு ஆண்ட செங்கணாற்கு அடியேன்

திருநீல கண்டத்துப் பாணனார்க்கு அடியேன்                                                                      

என்னவனாம் அரன் அடியே அடைந்திட்ட சடையன்

      இசைஞானி காதலன் திருநாவலூர்க் கோன்,                                                                           

அன்னவனாம் ஆரூரன் அடிமை கேட்டு உவப்பார்

ஆரூரில் அம்மானுக்கு அன்பர்  ஆவாரே.                                                                                          

திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment