Popular Posts

Wednesday, April 20, 2022

ஞானசரியை

 

ஞானசரியை

நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே
     நிறைந்து நிறைந்து ஊற்றெழும் கண்ணீர் அதனால் உடம்பு
நனைந்து நனைந்து அருளமுதே நன்னிதியே ஞான
     நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று
வனைந்து வனைந்து ஏத்துதும் நாம் வம்மின் உலகியலீர்
     மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியம் சொல்கின்றேன்
     பொற்சபையில் சிற்சபையில் புகும் தருணம் இதுவே.

புகும் தருணம் இதுகண்டீர் நம்மவரே நான் தான்
     புகல்கின்றேன் என்மொழி ஓர் பொய்மொழி என்னாதீர்
உகுந்தருணம் உற்றவரும் பெற்றவரும் பிறரும்
     உடைமைகளும் உலகியலும் உற்றதுணை அன்றே
மிகுந்த சுவைக்கரும்பே செங்கனியே கோற்றேனே
     மெய்ப்பயனே கைப்பொருளே விலையறியா மணியே
தகுந்த தனிப்பெரும்பதியே தயாநிதியே கதியே
     சத்தியமே என்றுரைமின் பத்தியொடு பணிந்தே.

பணிந்து பணிந்து அணிந்து அணிந்து பாடுமினோ உலகீர்
     பரம்பரமே சிதம்பரமே பராபரமே வரமே
துணிந்து வந்த வேதாந்த சுத்த அனுபவமே
     துரிய முடி அனுபவமே சுத்த சித்தாந்தம் அதாய்த்
தணிந்த நிலைப் பெருஞ்சுகமே சமரச சன்மார்க்க
     சத்தியமே இயற்கையுண்மைத் தனிப்பதியே என்று
கணிந்து உளத்தே கனிந்து நினைந்து உரைத்திடில் அப்பொழுதே
     காணாத காட்சி எலாம் கண்டுகொளலாமே.

கண்டதெலாம் அநித்தியமே கேட்டதெலாம் பழுதே
     கற்றதெலாம் பொய்யே நீர் களித்ததெலாம் வீணே
உண்டதெலாம் மலமே உட்கொண்டதெலாம் குறையே
     உலகியலீர் இதுவரையும் உண்மை அறிந்திலிரே
விண்டதனால் என் இனி நீர் சமரச சன்மார்க்க
     மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள் நன்கு உணர்ந்தே
எண்டகு சிற்றம்பலத்தே எந்தை அருள் அடைமின்
     இறவாத வரம்பெறலாம் இன்பமுற லாமே.


இன்புறலாம் எவ்வுலகும் ஏத்திட வாழ்ந்திடலாம்
     எல்லாம் செய்வல்ல சித்தி இறைமையும் பெற்றிடலாம்
அன்புடையீர் வம்மின் இங்கே சமரச சன்மார்க்கம்
     அடைந்திடுமின் அகவடிவு இங்கு அனக வடிவாகிப்
பொன்புடை நன்கு ஒளிர்ஒளியே புத்தமுதே ஞான
     பூரணமே ஆரணத்தின் பொருள் முடி மேல் பொருளே
வன்புடையார் பெறற்கு அரிதாம் மணியே சிற்சபையின்
     மாமருந்தே என்றுரைமின் தீமையெலாம் தவிர்ந்தே.

தீமை எலாம் நன்மை என்றே திருஉளம் கொண்டு அருளி

      இச்சிறியேனுக்கு அருளமுதத் தெளிவளித்த திறத்தை
ஆமயந்தீர்த்து இயற்கை இன்ப அனுபவமே மயமாய்
     அம்பலத்தே விளங்குகின்ற அருட்பெருஞ்சோதியை ஓர்
ஓமயவான் வடிவுடையார் உள்ளகத்தே நிறைந்த
     ஒருபொருளைப் பெருங்கருணை உடைய பெரும்பதியை
நாமருவி இறவாத நலம் பெறலாம் உலகீர்
     நல்ல ஒரு தருணம் இது வல்லை வம்மின் நீரே.

நீர்பிறரோ யான் உமக்கு நேய உறவலனோ
     நெடுமொழியே உரைப்பன் அன்றிக் கொடுமொழி சொல்வேனோ
சார்புறவே அருளமுதம் தந்தெனையே மேல் ஏற்றித்
     தனித்த பெரும்சுகம் அளித்த தனித்த பெரும்பதி தான்
சீர்பெறவே திருப்பொதுவில் திருமேனி தரித்துச்
     சித்தாடல் புரிகின்ற திருநாள்கள் அடுத்த
ஓர்புறவே இதுநல்ல தருணம் இங்கே வம்மின் உலகியலீர்

     உன்னியவாறு உற்றிடுவீர் விரைந்தே.

விரைந்து விரைந்து அடைந்திடுமின் மேதினியீர் இங்கே
      மெய்மை உரைக்கின்றேன் நீர் வேறு நினையாதீர்
திரைந்து திரைந்து உளுத்தவரும் இளமை அடைந்திடவும்
      செத்தவர்கள் எழுந்திடவும் சித்தாடல் புரிய
வரைந்து வரைந்து எல்லாம் செய்வல்ல சித்தன் தானே
      வருகின்ற தருணம் இது வரம் பெறலாம் நீவீர்
கரைந்து கரைந்து உளம்உருகிக் கண்களில் நீர் பெருகிக்
      கருணை நடக்கடவுளை உட் கருதுமினோ களித்தே.

களித்து உலகில் அளவிகந்த காலம் உலகெல்லாம்
      களிப்படைய அருட்சோதிக்கடவுள் வரு தருணம்
தெளித்திடும் எத்தருணம் அதோ என்னாதீர் இதுவே
      செத்தவரை எழுப்புகின்ற திகழ்தருணம் உலகீர்
ஒளித்து உரைக்கின்றேன் அலன் நான் வாய்ப்பறை ஆர்க்கின்றேன்
      ஒரு சிறிதும் அச்சமுறேன் உள்ளபடி உணர்ந்தேன்
அளித்திடு சிற்றம்பலத்து என் அப்பன் அருள் பெறவே
      ஆசை உண்டேல் வம்மின் இங்கே நேசமுடை யீரே.


ஆசை உண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான்
      அம்மையுமாய் அப்பனுமாய் அருளும் அருளாளன்
ஏசற நீத்தெனை ஆட்கொண்டு எண்ணியவாறு அளித்தான்
      எல்லாம் செய்வல்ல சித்தன் என்னுயிரில் கலந்தான்
தேசுடைய பொதுவில் அருள் சித்தி நடம் புரியத்
      திருவுளங்கொண்டு எழுந்தருளும் திருநாள் இங்கு இதுவே
மோசஉரை என நினைத்து மயங்காதீர் உலகீர்
      முக்காலத்தினும் அழியா மூர்த்தம் அடைந்திடவே.

அடைந்திடுமின் உலகீர் இங்கு இது தருணம் கண்டீர்
      அருட்சோதிப் பெரும்பதி என் அப்பன் வரு தருணம்
கடைந்த தனித் திருவமுதம் களித்து அருத்தி எனக்கே
      காணாத காட்சி எலாம் காட்டுகின்ற தருணம்
இடைந்து ஒருசார் அலையாதீர் சுகம் எனைப்போல் பெறுவீர்
      யான் வேறு நீர் வேறு என்று எண்ணுகிலேன் உரைத்தேன்
உடைந்த சமயக்குழி நின்று எழுந்து உணர்மின் அழியா
      ஒருநெறியாம் சன்மார்க்கத் திருநெறி பெற்று வந்தே.

திருநெறி ஒன்றே அதுதான் சமரச சன்மார்க்கச்
      சிவநெறி என்று உணர்ந்து உலகீர் சேர்ந்திடுமின் ஈண்டு
வருநெறியில் எனை ஆட்கொண்டு அருளமுதம் அளித்து
      வல்லப சத்திகளெல்லாம் வழங்கிய ஓர் வள்ளல்
பெருநெறியில் சித்தாடத் திருவுளம் கொண்டருளிப்
      பெருங்கருணை வடிவினொடு வரும் தருணம் இதுவே
கருநெறி வீழ்ந்துழலாதீர் கலக்கம் அடையாதீர்
      கண்மையினால் கருத்தொருமித்து உண்மை உரைத்தேனே.


உண்மை உரைக்கின்றேன் இங்கு வந்தடைமின் உலகீர்
      உரை இதனில் சந்தேகித்து உளறி அழியாதீர்
எண்மையினான் எனநினையீர் எல்லாஞ்செய் வல்லான்
      என்னுள் அமர்ந்து இசைக்கின்றான் இது கேண்மின் நீவிர்
தண்மையொடு சுத்த சிவசன்மார்க்க நெறியில்
      சார்ந்து விரைந்து ஏறுமினோ சத்திய வாழ்வளிக்கக்
கண்மைதரும் ஒரு பெருஞ்சீர்க் கடவுள் எனப் புகலும்
      கருணை நிதி வருகின்ற தருணம் இது தானே.

தானே தான் ஆகி எல்லாம் தானாகி அலனாய்த்
      தனிப்பதியாய் விளங்கிடும் என் தந்தையை என் தாயை
வானே அவ்வான் கருவே வான் கருவின் முதலே
      வள்ளால் என்று அன்பரெலாம் உள்ளா நின்றவனைத்
தேனே செம்பாகே என்று இனித்திடும் தெள்ளமுதைச்
      சிற்சபையில் பெருவாழ்வைச் சிந்தை செய்மின் உலகீர்
ஊனேயும் உடலழியாது ஊழிதொறும் ஓங்கும்
      உத்தம சித்தியைப் பெறுவீர் சத்தியம் சொன்னேனே.

சத்திய வேதாந்தம் எலாம் சித்தாந்தம் எல்லாம்
      தனித்தனி மேல் உணர்ந்துணர்ந்தும் தன்னை உணர்தற்கு அரிதாய்
நித்திய சிற்சபை நடுவே நிறைந்து நடம் புரியும்
      நித்த பரிபூரணனைச் சித்த சிகாமணியை
அத்தகையோர் பெரும்பதியை அருமருந்தை அடியேன்
      ஆவியை என்ஆவியிலே அமர்ந்த தயாநிதியைச்
சித்தியெலாம் எனக்களித்த சிவகதியை உலகீர்
      சிந்தைசெய்து வாழ்த்துமினோ நிந்தை எலாம் தவிர்ந்தே.


நிந்தையிலார் நெஞ்சகத்தே நிறைந்த பெருந்தகையை
      நிலையனைத்தும் காட்டி அருள்நிலை அளித்த குருவை
எந்தையை என் தனித்தாயை என் இரு கண்மணியை
      என் உயிரை என் உணர்வை என் அறிவுள் அறிவை
சிந்தையிலே தனித்து இனிக்கும் தெள்ளமுதை அனைத்தும்
      செய்யவல்ல தனித்தலைமைச் சிவபதியை உலகீர்
முந்தை மல இருட்டொழிய முன்னுமினோ கரண
      முடுக்கொழித்துக் கடை மரண நடுக்கொழித்து முயன்றே.

முயன்று உலகில் பயன் அடையா மூடமதம் அனைத்தும்
      முடுகி அழிந்திடவும் ஒரு மோசமும் இல்லாதே
இயன்ற ஒரு சன்மார்க்கம் எங்கும் நிலைபெறவும்
      எம்மிறைவன் எழுந்தருளல் இது தருணம் கண்டீர்
துயின்று உணர்ந்தே எழுந்தவர் போல் இறந்தவர்கள் எல்லாம்
      தோன்ற எழுகின்றது இது தொடங்கி நிகழ்ந்திடும் நீர்
பயின்றறிய விரைந்து வம்மின் படியாத படிப்பைப்
      படித்திடலாம் உணர்ந்திடலாம் பற்றிடலாம் சுகமே.

சுகமறியீர் துன்பம் ஒன்றே துணிந்து அறிந்தீர் உலகீர்
     சூதறிந்தீர் வாதறிந்தீர் தூய்மை அறிந்திலிரே
இகம் அறியீர் பரம் அறியீர் என்னே நும் கருத்து ஈது
     என்புரிவீர் மரணம் வரில் எங்குறுவீர் அந்தோ
அகமறிந்தீர் அகமறிந்து அழியாத ஞான
     அமுத வடிவம் பெறலாம் அடைந்திடுமின் ஈண்டே
முகமறியார் போலிருந்தீர் என்னை அறியீரோ
     முத்தரெலாம் போற்றும் அருட் சித்தர் மகன் நானே.


நான்உரைக்கும் வார்த்தை எல்லாம் நாயகன் தன் வார்த்தை
     நம்புமினோ நமரங்காள் நல் தருணம் இதுவே
வான் உரைத்த மணி மன்றில் நடம்புரி எம்பெருமான்
     வரவு எதிர்கொண்டு அவன் அருளால் வரங்களெலாம் பெறவே
தேன்உரைக்கும் உளம்இனிக்க எழுகின்றேன் நீவீர்
     தெரிந்து அடைந்து என்னுடன் எழுமின் சித்திபெறல் ஆகும்
ஏனுரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர்
     யான் அடையும் சுகத்தினை நீர் தான் அடைதல் குறித்தே.

குறித்து உரைக்கின்றேன் இதனைக் கேண்மின் இங்கே வம்மின்
     கோணும் மனக் குரங்காலே நாணுகின்ற உலகீர்
வெறித்த உம்மால் ஒருபயனும் வேண்டுகிலேன் எனது
     மெய்யுரையைப் பொய்யுரையாய் வேறு நினையாதீர்
பொறித்த மதம் சமயம் எலாம் பொய் பொய்யே அவற்றில்
     புகுதாதீர் சிவம் ஒன்றே பொருள் எனக் கண்டு அறிமின்
செறித்திடும் சிற்சபை நடத்தைத் தெரிந்து துதித்திடுமின்
     சித்தி எலாம் இத்தினமே சத்தியம் சேர்ந்திடுமே.

சேர்ந்திடவே ஒருப்படுமின் சமரச சன்மார்க்கத்
     திருநெறியே பெருநெறியாம் சித்தி எல்லாம் பெறலாம்
ஓர்ந்திடுமின் உண்ணுதற்கும் உறங்குதற்கும் உணர்ந்தீர்
     உலகமெலாம் கண்டிடும் ஓர் உளவை அறிந்திலிரே
வார்ந்த கடல் உலகறிய மரணம் உண்டே அந்தோ
     மரணம் என்றால் சடம் எனும் ஓர் திரணமும் சம்மதியா
சார்ந்திடும் அம் மரணம் அதைத் தடுத்திடலாம் கண்டீர்
     தனித்திடு சிற்சபை நடத்தைத் தரிசனம் செய்வீரே.


செய்தாலும் தீமை எலாம் பொறுத்து அருள்வான் பொதுவில்
      திருநடஞ்செய் பெருங்கருணைத் திறத்தான் அங்கு அவனை
மெய்தாவ நினைத்திடுக சமரச சன்மார்க்கம்
      மேவுக என்று உரைக்கின்றேன் மேதினியீர் எனைத்தான்
வைதாலும் வைதிடுமின் வாழ்த்தெனக் கொண்டிடுவேன்
      மனங்கோணேன் மானம் எலாம் போனவழி விடுத்தேன்
பொய்தான் ஓர் சிறிதெனினும் புகலேன் சத்தியமே
      புகல்கின்றேன் நீவிர் எலாம் புனிதமுறும் பொருட்டே.

பொருட்டல நும் போகம் எலாம் பொய்யாம் இங்கிது நான்
      புகலுவது என் நாடொறும் புந்தியிற் கண்டதுவே
மருட்டு உலகீர் இருட்டுலகில் மடிவது அழகலவே
      மரணமிலாப் பெருவாழ்வில் வாழ வம்மின் இங்கே
பொருள் திறஞ் சேர் சுத்த சிவ சன்மார்க்க நிலையில்
      பொருந்துமின் சிற்சபை அமுதம் அருந்துமின் அன்புடனே
அருள்திறம் சேர்ந்து எண்ணியவாறு ஆடுமினோ நும்மை
      அடுப்பவரே அன்றி நின்று தடுப்பவர் மற்றிலையே

மற்றறிவோம் எனச்சிறிது தாழ்த்திருப்பீர் ஆனால்
      மரணமெனும் பெரும்பாவி வந்திடுமே அந்தோ
சற்றும் அதை நும்மாலே தடுக்க முடியாதே
      சமரச சன்மார்க்க சங்கத்தவர்கள் அல்லால் அதனை
எற்றி நின்று தடுக்கவல்லார் எவ்வுலகில் எவரும்
      இல்லை கண்டீர் சத்தியம் ஈது என் மொழி கொண்டு உலகீர்
பற்றிய பற்று அனைத்தினையும் பற்றற விட்டு அருள அம்பலப் பற்றே

      பற்றுமினோ எற்றும் இறவீரே.

                                 
இறந்தவரை எடுத்திடும்போது அரற்றுகின்றீர் உலகீர்
      இறவாத பெருவரம் நீர் ஏன் அடைய மாட்டீர்
மறந்து இருந்தீர் பிணிமூப்பில் சம்மதமோ நுமக்கு
     மறந்தும் இதை நினைக்கில் நல்லோர் மனம் நடுங்கும் கண்டீர்
சிறந்திடு சன்மார்க்கம் ஒன்றே பிணி மூப்பு மரணம்
     சேராமல் தவிர்த்திடுங்காண் தெரிந்து வம்மின் இங்கே
பிறந்த பிறப்பு இதிற்றானே நித்திய மெய்வாழ்வு
     பெற்றிடலாம் பேரின்பம் உற்றிடலாம் விரைந்தே.

உற்றமொழி உரைக்கின்றேன் ஒருமையினால் உமக்கே
     உறவன் அன்றிப் பகைவன் என உன்னாதீர் உலகீர்
கற்றவரும் கல்லாரும் அழிந்திடக் காண்கின்றீர்
     கரணம் எலாம் கலங்கவரும் மரணமும் சம்மதமோ
சற்றும் இதைச் சம்மதியாது என் மனந்தான் உமது
     தன்மனந்தான் கன்மனமோ வன்மனமோ அறியேன்
இற்றிதனைத் தடுத்திடலாம் என்னொடும் சேர்ந்திடுமின்
     என்மார்க்கம் இறப்பு ஒழிக்கும் சன்மார்க்கந் தானே.

சன்மார்க்கப் பெருங்குணத்தார் தம்பதியை என்னைத்
     தாங்குகின்ற பெரும்பதியைத் தனித்த சபாபதியை
நன்மார்க்கத்து எனை நடத்திச் சன்மார்க்க சங்கம்
     நடுவு இருக்க அருளமுதம் நல்கிய நாயகனைப்
புன்மார்க்கர்க்கு அறிவரிதாம் புண்ணியனை ஞான
     பூரண மெய்ப் பொருளாகிப் பொருந்திய மாமருந்தை
அன்மார்க்கம் தவிர்த்து அருளி அம்பலத்தே நடஞ்செய்
     அருட்பெருஞ்சோதியை உலகீர் தெருட்கொளச் சார்வீரே.


சார் உலக வாதனையைத் தவிர்த்தவர் உள்ளகத்தே
     சத்தியமாய் அமர்ந்தருளும் உத்தம சற்குருவை
நேர் உறவே எவராலும் கண்டுகொளற்கு அரிதாம்
     நித்திய வான்பொருளை எல்லா நிலைகளும் தானாகி
ஏர் உறவே விளங்குகின்ற இயற்கைஉண்மை தன்னை
     எல்லாம் செய் வல்லபத்தை எனக்கு அளித்த பதியை
ஓர் உறவு என்றடைந்து உலகீர் போற்றி மகிழ்ந்திடுமின்
     உள்ளம் எலாம் கனிந்து உருகி உள்ளபடி நினைந்தே.

 

திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment